ஆயிரம் விளக்கில் மலர மறந்த தாமரை... நச்சுன்னு ஒரு வெற்றி.. வாடிப் போன குஷ்பு.. யாருங்க இந்த எழிலன்?
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வெற்றி பெற்றார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எழிலன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதிலிருந்தே அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் குஷ்புவை விட அதிக வாக்குகளையே பெற்றிருந்தார்.
அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் டாக்டர் எழிலன் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்புவை தோற்கடித்தார்.

களப்பணி
திமுகவிலிருந்து காங்கிரஸிற்கு வந்த குஷ்பு அங்கு சீட் கொடுக்கவில்லை என்பதால் பாஜகவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. வந்த சில நாட்களிலேயே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை குஷ்பு பெற்றார். ஆயிரம் விளக்கு தொகுதியில் கடுமையாக களப்பணியாற்றினார்.

தோல்வி
எனினும் அவர் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் எழிலன் ஒரு மருத்துவர். யார் இவர் என்பதை பார்ப்போம். இளைஞரான இவரை டிவி விவாதங்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் சமூக நீதி, மாநில அரசின் கொள்கைகள், கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்.

இளைஞர்
இவர் மாநில திட்ட கமிஷனின் முன்னாள் துணை தலைவர் எம் நாகநாதனின் மகனாவார். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பதில் நாகநாதன் வல்லவர் ஆவார். எழிலன் ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்தார் எழிலன்.

தமிழ் ஈழம்
கருணாநிதியுடன் நேரத்தை செலவிடும் திமுக உறுப்பினர்களில் எழிலனும் ஒருவர். நீட் தேர்வை எதிர்த்து கடுமையைாக குரல் கொடுத்தார். இந்த தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்றார். அது போல் சேலம்- சென்னை பசுமை வழி சாலை திட்டத்தையும் எதிர்த்தார். இவர் தமிழ் ஈழம் உருவாக ஆதரவு அளித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications