"அங்கிளுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடு" பெண் குழந்தையிடம் சொல்லும் பெற்றோரே! டாக்டர் பரூக் அட்வைஸை கேளுங்க
சென்னை: பெண் குழந்தைகளுக்கு பறக்கும் முத்தத்தை கற்றுக் கொடுக்க வேண்டாம் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் நடந்த நிகழ்வு, ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல், சளி சீசனல் வைரஸ் தொற்று பாப்பாவுக்கு உடல் பரிசோதனை செய்து விட்டு மருந்துகள் எழுதிக்கொடுத்து அனுப்பும் போது அவரது தாய் "அங்கிளுக்கு டாட்டா சொல்லு" என்றார்.
அழகாக டாட்டா காட்டியது நானும்" டாட்டா குட்டி" என்று கூறினேன். அடுத்து அவரது தாய் அங்கிளுக்கு" ஒரு ஃப்ளையிங் கிஸ் குடு" என்றார். உடனே கையை தூக்கி உதட்டில் வைத்து பறக்கும் முத்தம் கொடுத்தது நான் அந்த தாயை உள்ளே மீண்டும் அழைத்து பேசினேன்."நான் யாரென்றே தெரியாத ஒருவன். எனக்கு எதற்கு உங்கள் பெண் குழந்தையை ஃப்ளையிங் கிஸ் கொடுக்க சொன்னீர்கள்?" என்றேன்.

சொந்தக்காரர்கள்
"இல்ல சார்...எங்க சொந்தக்காரங்க வீடுகளுக்கு போய்ட்டு அங்க இருந்து கிளம்பும் போது இப்டி ஃப்ளையிங் கிஸ் கொடுக்கப் பழக்கிவிட்ருக்கேன் சார்." "எதுக்காகம்மா ஃப்ளையிங் கிஸ் கொடுத்து பழக்குறீங்க. ஏதாவது காரணம் இருக்கா?" "சார்.. சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா ஒவ்வொருத்தங்களும் கிளம்பும் போது கன்னத்துல முத்தம் கொடுக்குறாங்க.. இதுனால அவுங்க கிட்ட இருந்து சளி இவளுக்கு பரவுது.

பிளையிங் கிஸ்
அதனால இவளுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுக்க பழக்கி கிட்டேன். என் இடுப்புலயே இருப்பா... யாரும் கிஸ் கொடுக்க கிட்ட வரமாட்டாங்க... அதனால சளி பரவாம இருக்கு.." "அருமை அருமை... எனக்கு ஒரு தொற்று நோய் தடுப்பு குறித்த ப்ராக்டிக்கல் பாடம் எடுத்துட்டீங்கம்மா.. என்ன படிச்சுருக்கீங்க?" "பனிரெண்டாவது சார்" "ஓ.. இன்னும் ஓபன் யுனிவர்சிட்டில படிங்கமா.. ஒரு டிகிரி முடிங்க..." "முயற்சி பண்றேன் சார்.."

பெண் குழந்தை
"இப்ப நான் ஒன்னு உங்களுக்கு ஒன்னு சொல்றேன். கேக்குறீங்களா?" "யாருக்குமே பெண் குழந்தைய கிஸ் கொடுக்க சொல்லி பழக்காதீங்க.. குறிப்பா அந்நிய ஆண்களுக்கு.. நான் டாக்டராகவே இருந்துட்டுப் போறேன். நானும் அந்த குழந்தையை பொறுத்த வரைக்கும் ஒரு அந்நிய ஆண் தான். பெண் குழந்தைய உங்க வீட்டுல இருக்கவங்க தவிர யாரையும் முத்தம் கொடுக்க விடாதீங்க. உங்க குழந்தைக்கும் முத்தம் கொடுக்க கத்துக்கொடுக்காதீங்க.

தனியா அனுப்பாதீங்கள்
பொதுவா குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை, பெண்கள் இல்லாத ஆண்கள் மட்டும் இருக்கும் வீடுகள்ல விளையாட தனியா அனுப்பாதீங்க. எப்பவும் குழந்தை வளர்ப்புல தனி கவனம். அக்கறை தேவை. அதுவும் பெண் குழந்தையை கண் கொத்திப்பாம்பா வளக்கணும்.. இன்னைக்கு இது போதும்.. போய்ட்டு வாங்க.." நான் சொன்னது சரியா? தவறா? என்று தெரியவில்லை. இருப்பினும் இப்போது நிலவும் சூழலில் குழந்தை வளர்ப்பில் அதீத ஜாக்கிரதை உணர்வு தேவை என்பதை அந்த தாயிடம் உணர்த்த வேண்டியது எனது கடமையாகியது. பின் குறிப்பு: தற்காலத்தில் ஆண் பெண் பிள்ளைகள் என்ற பேதமின்றி நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல்
ஐந்து வயதிலேயே நல்ல தொடுதல், தீய தொடுதல் போன்றவற்றை விளக்க வேண்டும். பெற்றோராகிய நாமும் கூட குழந்தைகளை தேவையற்ற இடங்களில் தொடுவது , முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை உதட்டில் முத்தமிடுவது என்பதும் தேவையற்ற இடமாகவே படுகிறது. கண்காணிப்பு செய்கிறோம் என்ற பெயரில் அவர்களின் சுதந்திரத்தை முழுவதுமாக அபகரிக்கும் வேலையை செய்து விடக்கூடாது. நல்லது கெட்டதை வாய்விட்டுப் பேசி அன்றாடம் நமது அன்பான கண்காணிப்பில் அவர்கள் வளருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர் பரூக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications