நுரையீரல் முதல் கல்லீரல் வரை இந்த 8 புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? டாக்டர் பரூக் அட்வைஸ்
புற்றுநோயின் அறிகுறிகளை தெரிந்து ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுங்கள்- டாக்டர் பரூக்
சென்னை: புற்றுநோயை அதன் அறிகுறிகளை வைத்தே கண்டறியலாம் என்றும் இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை எளிதாக வெல்லலாம் என்றும் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: புற்றுநோயை அதன் அறிகுறிகள் தோன்றுமுன் கண்டறிவது சாத்தியமா???
புற்று நோய் என்பதை ஆறாத புண் கட்டிகள் / வீக்கம், வலி, பசியின்மை, உதிரப்போக்கு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை சந்தித்து அதன் பிறகு நோயை கண்டறிகிறோம். நோய் கண்டறியப்பட்ட சூழ்நிலையில் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் சிகிச்சை சிறப்பான பலனளித்து முழுவதுமாக நோயில் இருந்து மீளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

சட்டை செய்யாமல் இருந்தால்
ஆனாலும் அறிகுறிகளை சட்டை செய்யாமல் நாம் நீண்ட நாட்கள் கழித்து புற்று நோயை கண்டறிகிறோம் என்றால் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலன் அளிப்பதில் குன்றிய திறனுடன் இருக்கும். ஆனால் அறிகுறிகள் தோன்றுமுன்னமே நம்மால் புற்றுநோயைக் கண்டறிய முடிந்தால் நிச்சயம் புற்று நோயினால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க இயலும் தானே.. அத்தகைய பரிசோதனைகளை இந்த கட்டுரையில் விவரிக்கிறேன்.

ஸ்கிரீனிங் டெஸ்ட்
வாய்ப்பு இருப்பவர்கள். தங்களது வயதுக்கு ஏற்றவாறு இந்த பரிசோதனைகளை செய்வது மூலம் புற்றுநோயை மிக மிக ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து களைய முடியும். இவற்றை SCREENING TESTS என்போம். அதாவது மக்களில் நோயின் அறிகுறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு இந்த பரிசோதனைகள் செய்யப்படும் போது புற்று நோயை கண்டறிய முடியும்.

1. நுரையீரல் புற்று நோய்
உலகளவில் புற்று நோய் மரணங்களில் இதற்குத் தான் முதலிடம். இருபது லட்ச மரணங்களுக்கு மேல்.. தங்களுக்கு நீண்ட நாள் புகைப்பழக்கம் இருந்ததா? அப்படியானால் தங்களது 55 வயது முதல் 74 வயது வரை வருடம் ஒருமுறை நுரையீரல் பகுதியை சிடி ஸ்கேன் எடுப்பது மூலம் மிக எளிதாக தோன்றும் நுரையீரல் புற்றை கண்டறிந்து விடலாம். புகை பிடிப்பது மூலமாக மட்டும் ஆண்டு தோறும் புற்று நோய் மரணங்களில் 22% நடக்கின்றன.

2. மார்பகப்புற்று நோய்
புற்று நோய் மரணங்களில் இரண்டாவது இடம் இது தான். மார்பகங்களை சுய பரிசோதனை செய்து பார்த்தால் கட்டி தோன்றுவது.
40 முதல் 74 வயது வரை வருடம் ஒருமுறை மேமோகிராம் எனும் மார்பகங்களை எக்ஸ்ரே எடுப்பது மூலம் மார்பகப் புற்றுநோயை கண்டறிய முடியும்.

3. வயிறு & குடல் புற்று நோய்
மூன்றாவது இடம், 18 லட்சம் மரணங்கள் 50 வயது முதல் 74 வயது வரை வயிறு மற்றும் குடல் சார்ந்த அறிகுறிகளான
வயிற்று வலி / நெஞ்செரிச்சல் / குமட்டல் / மலச்சிக்கல் / பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் வருடம் ஒருமுறை அறிகுறிகளுக்கு ஏற்ப எண்டோஸ்கோப்பி, கொலோனோஸ்கோப்பி , சிக்மாய்டோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகள் உதவும்.

4. ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்
சிறுநீர் கழிப்பதில் சிக்கல். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றுவது. உலகின் நான்காவது இடம் பெறும் அதிக புற்றுநோய் மரணங்களை உருவாக்கும் நோய் இது. வருடந்தோறும் 12 லட்சம் மரணங்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பெல்விஸ் மற்றும் ஆசன வாய் வழி விரல் விட்டு அறுவை சிகிச்சை நிபுணர் வருடம் ஒருமுறையேனும் பரிசோதனை செய்யும் போது இந்த புற்றுநோய் ஆரம்பகட்டத்திலேயே பிடிபடும் வாய்ப்பு உள்ளது. கூடவே ரத்தத்தில் PSA எனும் PROSTATE SPEICIFIC ANTIGEN எனும் பரிசோதனையை வருடம் ஒருமுறை 45 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் செய்து வரலாம்.

5. கர்ப்பவாய் புற்றுநோய் ( CERVICAL CANCER)
21 வயது முதல் 65 வயது வரை வருடந்தோறும் ஒரு முறை PAP டெஸ்ட் எனும் கர்ப்ப பை வாய் தடவல் பரிசோதனை கூடவே HUMAN PAPILLOMA VIRUS டெஸ்டிங் செய்யலாம். HPV க்கு எதிராக தடுப்பூசியை வளர்இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பு போட்டுக்கொள்வது இந்த வகை புற்றுநோயை தடுக்க உதவுகின்றது.

6. சினைப்பை புற்று நோய் ( OVARIAN CANCER) & கர்ப்பபை புற்று நோய் ( ENDOMETRIAL CANCER )
பெண்ணுறுப்பு வழியாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது சினைப்பை மற்றும் கர்ப்பபையில் கட்டிகள் இருப்பின் நன்றாகத் தெரியும் கூடவே ரத்தத்தில் CA-125 எனும் பொருள் அதிகமாக இருப்பின் சினைப்பை புற்று நோயை கண்டறிய இயலும்.

7. கல்லீரல் புற்று நோய் (LIVER CANCER )
சிரோசிஸ் நோய் இருப்பவர்கள் வருடம் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும். கல்லீரலில் கட்டிகள் என்று தோன்றியிருக்கின்றவா ? என்பதை அறிந்திட வேண்டும். ஹெப்பாடைடிஸ் பி வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை முறையாக எடுப்பதன் மூலம் அந்த தொற்றையும் அதனால் ஏற்படும் புற்றுநோயையும் தடுக்க முடியும். ரத்தத்தில் ஆல்ஃபா ஃபீட்டோ புத்தம் அதிகமாக இருப்பதும் கல்லீரல் புற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

8. ரத்த புற்றுநோய்கள்
ரத்தம் சார்ந்த புற்றுநோய்களான லூகிமியா போன்றவற்றை மொத்த ரத்த அணுக்கள்( COMPLETE HEMOGRAM) பரிசோதனை மூலம் அறிய முடியும். மேற்கொண்டு தேவைப்படும் பரிசோதனைகளை ரத்தம் சார்ந்த நோய்கள் சிறப்பு நிபுணர் பரிந்துரைப்பார்.

மாஸ்டர் ஹெல்த் செக் அப்
மேற்குறிப்பிட்ட பரிசோதனைகளை உள்ளடக்கிய வருடாந்திர மாஸ்டர் ஹெல்த் செக் அப் பேக்கேஜ்கள் உள்ளன. மாஸ்டர் ஹெல்த் செக் அப்களின் நோக்கமே Screening தான். அதாவது நோய் ஏற்படும் முன்னமே அதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் மரணங்களை தடுக்க இயலும் என்பதே . நம் நாட்டில் இந்த SCREENING குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. இருப்பினும் கேன்சர் விசயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து விரைவில் கண்டறிந்தால் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும். இருப்பினும் இந்த பரிசோதனைகளில் குறைந்த அளவு
FALSE POSITIVE (தவறாக நோய் இல்லாதவர்களை இருக்கிறது என்று காட்டவும்) FALSE NEGATIVE ( நோய் இருப்பவர்களை இல்லை என்று காட்டவும் வாய்ப்பு உள்ளது.

முழு வெற்றி
எனவே இந்த பரிசோதனைகளை வைத்து கூட மருத்துவ நிபுணர் நோயாளி கூறும் அறிகுறிகளை ஆராய்ந்து மேற்கொண்டு ஆய்வு செய்து நோய் குறித்த முடிவுக்கு வருவார்கள். புற்று நோயை விரைவில் கண்டறிந்தால் முழு வெற்றி பெறலாம். புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் எனது நண்பர்களில் புற்று நோயை வென்றவர்கள் இருப்பின் தாங்கள் புற்றுநோயை வென்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications