கடினமான திருமண உடன்படிக்கை! பற்றி எரியும் ஜெயம் ரவி விவகாரம்! விவாகரத்துகள் நடப்பது ஏன்?
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில் தற்போது விவாகரத்துகள் ஏன் நடைபெறுகின்றன என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: விவாகரத்துகள் நன்மையா, தீமையா? விவாகரத்துகளுக்குள் செல்வதற்கு முன்
இவ்வுலகில் எந்த ஒரு விசயத்தை செய்தாலும் அதில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். லாபமும் இருக்கும், நட்டமும் இருக்கும். இதை நாம் முன்பே உணர்ந்து தான் ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகிறோம்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். விவாகரத்துகள் ஏன் நிகழ்கின்றன. விவாகங்கள் நடப்பதால் தான் அவை ரத்தாகின்றன. எனவே விவாகங்களே தேவையில்லை என்ற கருத்து கொண்ட நண்பர்களும் இங்குண்டு. இந்த நிலை நோக்கி மேற்கத்திய நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம் வேண்டாம் , சேர்ந்தே சக பயணியாகத் தொடர்வோம், வாழ்வோம், குழந்தைகள் கூட பெற்றுக் கொள்வோம் , ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம். காரணம் அதற்குப் பின்பு சுதந்திரம் பறிபோய் விடுகிறது. அடக்குமுறை வந்துவிடுகிறது . அது நாளடைவில் விவாகரத்துக்கு கொண்டு சேர்க்கிறது என்பது அவர்கள் தரப்பு வாதம்.
இந்தியாவில் வாழும் நாம் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் போது தான் நமக்கு வாரிசுகள் என்று உருவாவதை சட்டம் அங்கீகரிக்கிறது. மேலும் நமது சமூக அமைப்பு திருமணத்தையே தொடர்ந்து போதித்து வந்திருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் இங்கு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை அத்தனை எளிதாக நம்மால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
ஆயினும் இங்கு பிறந்த பிள்ளைகள் வெளிநாடுகளில் அவ்வாறே லிவிங் டுகெதரில் பல ஆண்டுகள் வாழ்ந்து வருவதை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ளும் குணம் வந்திருக்கிறது என்பதையும் காண்கிறேன். திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை ஆகும்.
அதாவது திருமணத்தில் இணைந்த இருவர் - தங்களுக்குள் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்கின்றனர். படுக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். உணவு உறைவிடம் என சகலத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். தங்களுக்கான வாரிசுகளையும் உருவாக்கிக் கொள்கின்றனர்.
இந்த உடன்படிக்கைப்படி ஒருவர் மற்றொருவருக்கு பொறுப்புதாரியாகவும் ரகசியங்களைக் காப்பவர்களாகவும் வேறு துணை நாடாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே உடன்படிக்கை. எனினும் இத்தகைய கடுமையான உடன்படிக்கையை நிறைவேற்ற இருவருக்குள்ளேயும் அளவற்ற சகிப்புத்தன்மை, பொறுமை, பிறர் வலியை உணரும் தன்மை, பிறரை உயர்த்தும் தன்மை, துணையை விட்டுக் கொடுக்காத குணம், துணைக்காக எந்த எல்லை வரையும் செல்லும் தைரியம்
வாரிசுகளுக்காக உழைத்து அவர்களுக்காக தியாகம் செய்யும் பக்குவம் தன் இணையர் இருக்கும் போது வேறு ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாகாமல் கட்டுப்பாடு கொள்ளுதல் இவ்வாறு பல சரத்துகள் அடங்கியது இந்த திருமண உடன்படிக்கைக் கோப்பு.
இவ்வாறு திருமணத்தில் இணைந்தோரில் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ இந்த சரத்துகளில் பலவற்றை மீறும் போது அந்த உறவு கசந்து விடுகிறது. விட்டுக் கொடுத்தல் என்பது எப்போதும் ஒரு தலைபட்சமாக நிகழும் போதும். தியாகங்கள் எப்போதும் இணையரில் ஒருவர் மட்டுமே செய்யும் போதும் , இணையரில் ஒருவர் பிற உறவுகள் குறிப்பாக எதிர்பாலின உறவுகளில் வரம்பு மீறும் போதும், தங்களுக்குத் தேவையான உணவு உறைவிடம் உடல் ரீதியான இன்பம் ஆகியவை தொடர்ந்து மறுக்கப்படும்போது ஏற்படும் விரக்தி
கணவன் மனைவி இருவர் உறவில் தேவையின்றி பெற்றோர் உற்றார் உறவினரின் தலையீடு அதனால் ஏற்படும் சிக்கல்கள், மது, சிகரெட், கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருப்பது, குடும்ப வன்முறை நிகழ்வுகள் இணையரை தனது சினத்தை வெளியேற்ற எளிதான இலக்காக அணுகுவது இணையர் மீது தகாத வார்த்தைகளைப் பிரயோகிப்பது, அடிப்பது, உதைப்பது இப்படி மேலே சொன்ன பல காரணங்கள் பல விதங்களில் வெளிப்பட்டு திருமண உறவுகள் கசந்து போய் விவாகரத்துகளில் வந்து நிற்கின்றன.
நாளுக்கு நாள் விவாகரத்து கோரி வழக்காடு மன்றங்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு வைத்த மருதாணி அழிந்து போவதற்குள் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய நிகழ்வுகள் இங்குண்டு இவற்றை சரி செய்ய என்ன செய்யலாம். திருமணங்களை முதலில் நம் சேமிப்பு அனைத்தையும் போட்டு செய்யும் வைபவங்களாக இல்லாமல் குறைவான செலவில் நடத்தும் சாதாரண நிகழ்வுகளாக மாற்றிடலாம்.
பல வீடுகளில் விவாகரத்து குறித்து இணையரில் ஒருவர் பேச்சு எடுக்கும் போது "ஊரைக் கூட்டி பல லட்சம் செலவழிச்சு கல்யாணம் பண்ணேன் நீ இப்டி சொல்ற?" என்று கேட்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு இருக்கும் வரதட்சிணை வியாபாரம் - பெண்களை சந்தைப் பொருளாக பாவிக்கும் குணம், ரிவர்ஸ் டவுரி எனும் பெயரில் ஆண்களிடம் இருந்து அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் மீறி பெண் வீட்டார் எதிர்பார்ப்பதும் நடக்கிறது.
திருமணங்கள் எளிமையாக நடக்கட்டும். அவ்வாறு ஆகிவிட்டால் விவாகரத்துகள் இத்தனை துன்பகரமானதாக இருக்காது. திருமணம் நடந்த பிறகு ஒரு வருட காலம் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம். இதற்குக் காரணம் அந்த ஒரு வருட காலத்தில் இணையர் எப்படி? இணையரின் குடும்பம் எப்படி? நமக்குள் மெய்யான பிணைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்த பின் குழந்தை பிறப்பை தேர்ந்தெடுக்கலாம்.
பல நேரங்களில் பிறந்த குழந்தைக்காக பிடிக்காத இணையுடன் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க இந்த முடிவு உதவலாம். திருமணம் செய்த இருவருக்குள் நல்ல புரிந்துணர்வு வருவதற்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய தனிமையையும் அவர்கள் விசயத்தில் முடிவு எடுக்கும் சுதந்திரத்தையும் பெற்றோர்கள் அவர்களிடம் தந்து விட்டு சற்று தூரம் நின்று அமைதியாக வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம்.
பல இடங்களில் கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமலும் கூட இணையரின் பெற்றோர் தலையீடு, குறுக்கீடு ஆகியவற்றால் உறவு விரிசல் ஏற்படுவதும் நிகழ்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். முடிந்த அளவு திருமணமான இளம் தம்பதிகள் சில வருடங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். திருமணம் ஆன உடனே பிரிவு என்பதும் பல உறவு சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிறது.
விவாகரத்துகள் பல நேரங்களில் நேரடியாக இணையரின் முடிவாக இல்லாமல் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினர் தரும் அழுத்தத்தால் நிகழ்வதாக உள்ளது. இணையர் குறித்து முடிவெடுக்கும் போது இத்தகைய தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அது நமது சூழ்நிலையில் இயலாது காரணம். இங்கு திருமணம் என்பதை பெற்றோர் உற்றார் உறவினர் தான் பார்த்து செய்து வைக்கின்றனர்.
எனவே பிரித்து வைக்கும் முடிவையும் அவர்களே முந்திக் கொண்டு செய்கின்றனர். இது தவறானது ஆபத்தானது. தனது இணையரை முடிவெடுக்கும் மற்றும் உறவை முறிக்கும் அதிகாரம் அந்த சம்பந்தப்பட்ட நபருக்குத் தான் இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சுதந்திரம் ஏன் இல்லை? இதற்கு முக்கிய காரணம் இணையருள் முக்கியமாக பெண்கள் - பொருளாதார சுதந்திரமின்றி இருக்கிறார்கள்.
இதன் விளைவாக தங்களது அன்றாடத் தேவைகளுக்கும் தந்தை பின் கணவன் அதன் பிறகு மகன் ஆகியோரை நம்பி இருக்கிறார்கள். இதன் விளைவாக எத்தனை டாக்சிக் தந்தையாக இருந்தாலும் சரி எத்தனை கொடுமைப்படுத்தும் அடிக்கும் கேவலமான வார்த்தைகள் பேசும் கணவனாக இருந்தாலும் குடிகார மகனாக இருந்தாலும் சரி இவர்களை பொருளாதாரத்திற்காக நம்பி வாழ வேண்டிய நிலையில் பெரும்பாலும் பெண்களே இருக்கிறார்கள்.
இந்த நிலை , கல்வியாலும் வேலைவாய்ப்பாலும் சுய தொழிலால் மட்டுமே மாற முடியும். இத்தனை விட்டுக் கொடுத்தல், தட்டிக் கொடுத்தல் நிகழ்வுகளுக்கும் பின்பும் இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்தால் அந்த விவாகரத்தை வழக்காடு மன்றங்களில் எளிமையாக்க வேண்டும். அப்போ குழந்தைகள் என்ன ஆவார்கள்? தினமும் டாக்சிக்கான சூழ்நிலையில் தனது ஒருவருக்கொருவர் பிடிக்காமல் வாழும் தாய் தந்தையை பார்த்து வாழ்வதை விட தனியாக ஒரு பெற்றோருடன் வாழ்வது சிறந்தது. விவாகரத்துகளை கேலி செய்யத் தேவையில்லை. அது இருவரும் புரிந்து கொள்ளாததால் எடுக்கும் முடிவு அல்ல.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் எடுக்கும் முடிவு என்று அதை சமூகம் ஏற்க வேண்டும். அதன் பின் இணையர் அவரவர் விருப்பின் பேரில் வாழ்க்கைத் துணைகளை ஏற்பதையும் நாம் ஆதரிக்க வேண்டும். விவாகரத்துக்குக் காரணம், விவாகத்தைச் சுற்றியுள்ள அதற்குப்பின் நடக்கும் பல பிரச்சனைகளாகவே இருக்கின்றன. அவற்றை சமூகமாக நம்மால் இயன்ற அளவு களைய முயற்சிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications