திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு புது அசைன்மெண்ட்! 3 நாட்களுக்கு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!
சென்னை: திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளருக்கு திமுக தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மே 7,8,9, ஆகிய மூன்று தேதிகளும் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அதில் உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர் மாணவர் - மகளிர் - கழனியில் பாடுபடும் உழவர் - ஆலையில் உழைக்கும் தொழிலாளி - மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் "திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும்.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்.'' இவ்வாறு திமுக தலைமைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications