இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம்.. தமிழகம் மீது மட்டும் பழி போட வேண்டாம் - அமைச்சர் ரகுபதி
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ளது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். பாஜகவில் உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்துவதை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜகதான் என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. போதைப்பொருள் வழக்குகளில் 80%-க்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு.

லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை. எதிர்கால தலைமுறையினரை காக்க வேண்டும் என்பதற்காக போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போதைப்பொருள் கடத்தும் பாஜகவினரை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டு வருகிறது. என்னுடைய கவலை தமிழ்நாட்டை சேர்ந்த பல பெற்றோர்கள் மனதில் உள்ளது என்பது எனக்கு தெரியும்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் எனது மனதை அரித்து எடுக்கும் கவலையாக உள்ளது. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது.
இன்றைய குழந்தைகள் மட்டும் அல்ல; நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் கியாரண்டி என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாகவே இன்றைய தினம் புள்ளி விபரங்களுடன் பதில் அளித்துள்ளார் சட்ட அமைச்சர் ரகுபதி.












Click it and Unblock the Notifications