Chennai Traffic alert: மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை - பவர் ஹவுஸ் வரை நடைபெறுவதால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. நாளை முதல் நடைமுறைக்கு வரும் இந்த போக்குவரத்து மாற்றம் ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் கட்டுமானம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்தது.
இப்போது சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை பச்சை வழித்தடத்திலும் என மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்
இதையடுத்து மெட்டரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம் அறிவிக்கப்பட்டது.. அதன்படி மாதவரம் - சிப்காட் (45.8 கிமீ), மாதவரம் - சோழிங்கநல்லூர் (47 கிமீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (26.1 கிமீ) ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 118.9 கிமீ தொலைவில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட மெட்ரோ திட்டம் போல இல்லாமல் இந்த இரண்டாம் கட்டத்தைக் குறைவான செலவிலும், விரைவாகவும் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை வரும் 2026ஆம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்
இதனால் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மெட்ரோ கட்டுமான பணிகள் காரணமாகத் தலைநகர் சென்னையில் நாளை (செப். 14) முதல் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் அடுத்த ஓர் ஆண்டிற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலை
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடிச்சாலைச் சந்திப்புவரை நடைபெறுகிறது. இதையொட்டி, அந்தப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.14) முதல் ஓர் ஆண்டுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாகச் செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.
Recommended Video

கோடம்பாக்கம் மேம்பாலம் - போரூர்
கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவா் ஹவுஸ் சந்திப்புவரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலது புறம் திரும்பி 2-ஆவது அவென்யூ 100 அடி சாலை வழியாக 100 அடிச்சாலைச் சந்திப்புவரை சென்று நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை 80 அடிச்சாலை, வன்னியர் சாலை வழியாக போரூர், சாலிகிராமம் செல்லலாம்

கோடம்பாக்கம் மேம்பாலம் - வடபழனி
கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவா் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2-ஆவதுஅவென்யூ சாலை 100 அடிச் சாலை வழியாகச் சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.

Array
அதேபோல வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாகத் திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம். அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாகச் செல்லலாம்.

ஒரு வழிப் பாதை
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிற்குச் செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்குச் செல்ல அனுமதியில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட திட்டம்
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களுக்கு இந்த மெட்ரோ சேவை பெரியளவில் உதவியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் சென்னை மெட்ரோ வருவாய் கணிசமாக அதிகரிக்கும். அதேபோல கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், சென்னையைச் சுற்றி வெறும் 2.5 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications