நள்ளிரவில் திடீரென குவிந்த மக்கள்.. கிளாம்பாக்கத்தில் அதிகாலை வரை பயங்கர கூட்ட நெரிசல்! என்ன மேட்டர்
சென்னை: வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதனால் விடிய விடியச் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிச் சென்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தான் பெரும்பாலான மக்கள் வந்து வேலை செய்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து எல்லாம் சென்னையில் மக்கள் குவிந்துள்ளனர்.

இதனால் எப்போதும் பரபரப்பான நகரமாகவே சென்னை இருந்து வருகிறது. அதேநேரம் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் வாழும் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். அந்த தொடர் விடுமுறை நாட்களில் நகரமே காலியாக இருக்கும்.
தொடர் விடுமுறை: அதன்படி இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை நாட்களாகும். செவ்வாய்க்கிழமை மிலாடி நபி வருகிறது. முதலில் இந்த மிலாடி நபி திங்கள்கிழமை கொண்டாடப்படும் என்றே கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், பின்னர் அது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

திங்கள்கிழமை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொண்டால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும். இதைக் கருத்தில் கொண்டே வார இறுதி மற்றும் செவ்வாய்க்கிழமை மிலாடி நபி விடுமுறை நாட்களைக் கொண்டாடச் சென்னையில் இருந்து மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இதனால் நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திடீரென கூட்டம்: குறிப்பாகச் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடியக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பொதுமக்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன. குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

கடுமையான டிராபிக்: இதன் காரணமாக இரவு தொடங்கி அதிகாலை வரை மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் இருந்தது. சென்னையில் இருந்து பொதுமக்கள் மொத்தமாகக் கிளம்பி சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். பேருந்து நிலையம் மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் சுங்கச்சாவடிகளில் இதனால் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications