ரூ 5000 கோடியை சுருட்டியதாக நியோமேக்ஸ் மீது புகார்! 30 இடங்களில் அதிரடி ரெய்டால் பரபரப்பு
சென்னை: நியோமேக்ஸ் தொடர்புடைய 30 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
தென் மாவட்டங்களான விருதுநகர், மதுரை, நெல்லை, தேவக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நியோ மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட ஆண்டுக்கு பிறகு பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறப்படுகிறது.

இதை நம்பி கிட்டதட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களின் முகவர்களின் பேச்சை நம்பி முதலீடு செய்தனர். அவற்றை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரின் பேரில் சென்ட்ரியோ குரூப் ஆப் கம்பெனி, நியோ மேக்ஸ் மற்றும் துணை நிறுவன இயக்குநர்களான மதுரையை சேர்ந்த கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே தேவக்கோட்டையை சேர்ந்த சைமன்ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு இயக்குநர் சகாயராஜா என்பவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுக்க வசதியாக கடந்த 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு மனு மேளா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதில் பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 28 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்பதால் யாரும் புகார் அளிக்க வேண்டாம் என நியோ மேக்ஸ் நிறுவனம் வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க தயங்கியதாக தெரிகிறது.
சுமார் ரூ 5000 கோடி மோசடி செய்துள்ள நிலையில் இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். தென் தமிழகத்தில் விருதுநகர், பாளை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
