“பாஜக - அதிமுகவின் கூட்டணி கட்சிதான் அமலாக்கத்துறை”.. அமைச்சர் ரகுபதி பரபர பேட்டி!
சென்னை: "அதிமுக, பாஜகவின் கூட்டணி கட்சிதான் அமலாக்கத் துறை. அண்ணாமலை என்ன சொன்னாரோ அதையேதான் அமலாக்கத்துறையும் சொன்னது" என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி இன்று தமிழக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கனமும் இல்லை - வழியில் பயமும் இல்லை.

எங்களது கவுன்டர் பெட்டிஷனை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை, எங்களது கோரிக்கையையும் அவர் பார்க்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் பொறுத்தவரைக்கும் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்திற்கு சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.
ஆனால், அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா வழக்கை அன்றைக்கு வேறு மாநிலத்திலேயே விசாரிக்க வேண்டும் தமிழ்நாட்டில் விசாரித்தால் சரியாக இருக்காது என்று வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கைப் பற்றி கேட்கவே இல்லை. எங்களுடைய கோரிக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது தான்.
டாஸ்மாக் ரெய்டு பற்றி 2016-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தினார்கள். ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே அவர்கள் வெளியிடவில்லை. என்ன கணக்குகள் கைப்பற்றினோமா? எவ்வளவு தொகை அங்கே முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை.
அன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார். அதைத்தான் அடுத்து ED சொன்னது. அதாவது அண்ணாமலை என்ன சொன்னாரோ அதையே ED சொன்னது. அதற்குப் பிறகு டெல்லிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி அதை ஆயிரம் கோடி என்றார். அதாவது அவர்களுக்கு உள்ள தொடர்பு அதன் மூலமாக தெரியுமே தவிர நிச்சயமாக எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
எந்த தவறுக்கும் எங்களுடைய தலைவர் இடம் கொடுக்கவில்லை. முதலமைச்சரோ, அரசோ இடம் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் வழக்கை அவர்கள் தொடர்ந்தால் வழக்கில் நிரூபிக்க முடியும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அதனால், சட்டமன்றத்தில் டாஸ்மாக்கை பற்றி பேசவில்லை எங்களை அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார்.
நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கைப் பற்றி விசாரிக்கக் கூடாது. உடனே அவர் சொல்கிறார் நீங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நாங்கள் ட்ரான்ஸ்ஃபர் பெட்டிஷன் போடவில்லை கவுண்டரில் தான் சொல்லி இருக்கிறோம். இது போன்று ஒரே இடத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரியுங்கள் என்று அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications