தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் திடீரென பாதுகாப்பு அதிகரிப்பு! மீண்டும் அமலாக்கத்துறை சோதனையா?
சென்னை: தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் நிலையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளிலும் சோதனை நடைபெறுமோ? என்ற கேள்வியை இந்த பாதுகாப்பு அதிகரிப்பு நடவடிக்கை எழுப்பி இருக்கிறது.
அமைச்சர் பொன்முடி மீதான 11 ஆண்டுகளுக்கு முந்தைய செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்துகின்றனர். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் இச்சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் 2 வழக்குகளில் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென 11 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொன்முடியின் அறைகளில் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்துமோ? என்ற சந்தேகத்தை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் தலைமை செயலகத்துக்குள்ளும் நுழைவது வழக்கமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications