ரெய்டு முடிந்ததும் ED அதிகாரிகளுக்கு கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அனுப்பிவைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி
சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. தனது வீட்டில் சோதனை நடத்திய ED அதிகாரிகளுக்கு கைகுலுக்கி சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமை வழிச்சாலை வீட்டிலிருந்து, சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பைகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் அமைச்சருக்கு சொந்தமான நூற்பாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திராணி ஆகிய 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் இன்று காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டடனர்.
ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு சீலப்பாடியில் உள்ளது. இவரது வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் ஒருபகுதியாக, சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் இருக்கும் ஐ.பெரியசாமியின் அறையில் 4-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல், பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டர்.
அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் அறையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
11 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெற்ற நிலையில், சோதனை தொடர்பான விவரங்கள் குறித்த தகவலை பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்குவதற்காக ஐ.பெரியசாமி வீட்டிற்குள் பிரிண்டர் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன, அது குறித்து வீட்டில் உள்ள நபர்களிடம் அதிகாரிகள் கையெழுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 11 மணி நேரமாக சென்னையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு செய்த உடன் அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை சிரித்த முகத்துடன் கை கொடுத்து அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications