வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கலில் சிக்கி உள்ளார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இருப்பினும் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர். அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடந்த 2013ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அமலாக்கத்துறை விசாரணைக்குள் நுழைந்தது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி கடந்த மார்ச் மாதம் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் மீண்டும் இப்போது கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடிதம் இன்று தமிழக தலைமை செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பக்கங்களை கடிதம் கொண்டுள்ளது.
அதில்,'' குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு வழக்குத் தொடர்வது பற்றி முடிவெடுக்காவிட்டால், இந்திய நாகரிக பாதுகாப்பு சன்ஹிதா (BNSS) சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியும். அதோடு மாநில அரசு 120 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்புதல் அளித்து விட்டதாக கருதப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications