கேட்டீங்களா, அப்பவே சொன்னேனே.. திமுகவிடம் பாய்ந்த எடப்பாடி பழனிசாமி.. பின்னாடியே வந்த ஜவாஹிருல்லா
சென்னை: கள்ளச்சாராய உயிர்ப்பலி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்டும் பதிவிட்டிருந்தார். அதில், கடந்த 10 வருடமாக அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலை தூக்கியுள்ளது.

இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் இப்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எடப்பாடி பேட்டி: இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அப்பாவி மக்களின் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.. இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் பெருகிவிட்டதாக சட்டபேரவையிலேயே நான் பேசினேன். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் விஷ சாராய மரணங்களை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடை செய்ய முடியவில்லை. கஞ்சா ஒழிப்பு 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 500 கடைகளை மூடுவதாக சொல்லி 100 கடைகளை திறக்கிறார்கள். விளையாட்டு மைதானம், திருமண மண்டபத்தில் கூட மதுபானத்தை செய்யலாம் என அரசு கூறியுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து, மனிதநேய மக்கள் கட்சி விமர்சித்துள்ளது.. அக்கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
ஜவாஹிருல்லா கருத்து: மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக வருகிற 21ம் தேதி மறைமலைநகரில் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசு முழு முயற்சி எடுத்து முற்றிலுமாக கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய பலி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் அரசியல் செய்கிறார். ஏராளமான சாலை விபத்து, தற்கொலை இதற்கெல்லாம் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி பலநூறு முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications