வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு
சென்னை: "நாம் தமிழர்" கட்சியில் இருந்து விலகி இருந்த காளியம்மாள் கடந்த 13ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதோடு, அவரை பேச்சாளராக மட்டுமே பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே தங்களது தொகுதியில் வேட்பாளர் கனவில் உள்ளவர்களையும், உழைப்பவர்களையும் பகைக்க கூடாது என்பது எடப்பாடியின் இந்த முடிவுக்கு காரணம்.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். நாம் தமிழர் கட்சியில் மிகவும் பிரபலமாக வலம் வந்தார்.

அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். அவர் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் சேர உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், காளியம்மாள் அந்த 2 கட்சிகளிலும் இணையவில்லை.
அதிமுகவில் காளியம்மாள்
இந்நிலையில் தான், காளியம்மாள் கடந்த 13ம் தேதி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காளியம்மாள் சந்தித்து பேசினார். அதோடு காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார். காளியம்மாள் நாம் தமிழர் கட்சி மேடைகளில் கட்சி கொள்கைகளையும் எடுத்து பேசுவது மற்றும் எதிர்க்கட்சிகளை 'அட்டாக்' செய்வது உள்ளிட்டவற்றின் மூலமாக தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.
காளியம்மாள் பெயர் அடிபட்ட 2 தொகுதிகள்
இதனால், கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அத்தகைய அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி சட்டசபை தேர்தலில் காளியம்மாளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியானது. அதன்படி, காளியம்மாளுக்கு பூம்புகார் அல்லது மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
காளியம்மாள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியாக தான் மயிலாடுதுறை இருந்தது. அதன்பிறகு தான் மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிந்தது. இதனால் மயிலாடுதுறை அல்லது அந்த மாவட்டத்தில் உள்ள பூம்புகார் தொகுதியில் காளியம்மாளுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
2 தொகுதிகளிலும் கைவிரிப்பு
ஆனால் இந்த 2 தொகுதிகளிலும் தற்போது காளியம்மாளுக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதாவது மயிலாடுதுறை சட்டசபை தொகுதி ஏற்கனவே அதிமுக சார்பில் கூட்டணியில் உள்ள பாமகவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் பும்புகார் மட்டுமே எஞ்சி இருந்தது. ஆனால் இன்று அதிமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் பூம்புகார் சட்டசபை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். இதன்மூலம் காளியம்மாளுக்கு சீட் கிடைக்கவில்லை.
பேச்சாளராக பயன்படுத்த...
அதேவேளையில் அதிமுக, காளியம்மாளை பேச்சாளராக பயன்படுத்தி கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அதிமுகவை பொறுத்தவரை தற்போது கட்சியில் பெண் பிரமுகர்கள், பேச்சாளர்கள் பிரபலமாக இல்லை. இதனால் காளியம்மாள் சேர்ந்து இருப்பது அதிமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.
தங்கு தடையின்றி, எளிய மொழியில் பேசும் திறமை காளியம்மாளிடம் உள்ளது. தற்போது சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்படாததால் அவரை பேச்சாளராக அதிமுக பயன்படுத்தலாம். மூத்த நிர்வாகிகளை திருப்திப்படுத்தவும், காளியம்மாளிடம் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாததும் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications