50 கிலோ கேக்..மகளிர் தினம் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி..நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை
மகளிர் தினம் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று 50 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்த பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சி காலத்தில் மகளிருக்காக கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறினார். அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் வலுத்து வரும் நிலையில் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பாஜக இடையே கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் கூட்டணி நீடித்து வருகிறது. இந்த கூட்டணிக்கு தற்போது பங்கம் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அண்ணாமலையின் அதிரடியான சில நடவடிக்கைகளால் பாஜகவில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். முதலில் அவுட்டான விக்கெட் காயத்ரி ரகுராம். அவர் நேராக போன இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம். திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் எந்த கட்சியிலும் சேருவதாக அவர் கூறவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த நிர்மல் குமார் வெளியேறினார். அவர் வெளியேறியதுமே நேராக சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து விட்டார். இதை அடுத்து பாஜகவின் செயலாளர் விலகி அதிமுகவில் இணைந்து விட்டார் . இன்றைய தினம் பாஜகவின் சென்னை மேற்கு ஐடி பிரிவு அணியினர் கூண்டோடு விலகியுள்ளனர்.
அதிமுகவில் இணைவது பாஜகவினரை கோபமடைய வைத்துள்ளது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவரின் உருவ பொம்மைகளை, படங்களை எரித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து யாரையும் அழைக்கவில்லை . பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து வெளியேறியர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவர் மீது ஆத்திரத்தை காட்டி அவரது உருவ பொம்மைகளை பாஜகவினர் எரித்து வருகின்றனர். பதிலுக்கு அண்ணாமலையின் உருவ பொம்மை, புகைப்படங்களை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவுக்கும் பாஜகவுமான இந்த மோதலை பார்க்கும்போது இந்த கூட்டணி இப்போதே முறிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தாங்காது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அண்ணாமலையை காட்டமாக விமர்சனம் செய்த ஜெயக்குமார், அதிமுக பாஜக கூட்டணி நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் பேச்சு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? வேண்டாமா என்று எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதோடு நாளைய தினம் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்னமாதிரியான முடிவுகள் எடுக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மகன் உசேன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன் , சி. வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து முடிவுகள் எடுப்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார் எடப்பாடி. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications