Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவு பெரிய விஷயம்.. லட்டு மாதிரி வந்த வாய்ப்பை.. அதிமுக, தவெக மிஸ் பண்ணிட்டாங்க பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த தேர்வாணைய வாரிய முறைகேடு, குளறுபடி தமிழ்நாட்டிலும் நடந்து உள்ளது. ஆனால் இதை அதிமுக, தவெக இரண்டும் பெரிதாக பயன்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நடந்த பிரச்சனைகள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. ஒரு முக்கிய தேர்வாக அமைய வேண்டிய இந்தத் தேர்வு நாள், நிர்வாகக் குளறுபடிகளாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Group 2 Exam TNPSC 2

ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவு எண்களுக்கும், தேர்வு மையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கை எண்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் குளறுபடியே இந்த ரத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சில மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து ரத்து செய்யப்பட்டது, தேர்வர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, தவெக அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, தவெக இரண்டுமே வெறும் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டன. இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள விமர்சனத்தில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,

"Technical Fault" என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்

தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர்
ஸ்டாலின் அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி, அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன், என்று கூறி உள்ளார்.

விஜயும் இதேபோல் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் இரண்டு பேருமே போராட்டங்களை அறிவிக்கவில்லை, இளைஞர்களை சந்திக்கவில்லை, பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக பேசவில்லை. கிட்டத்தட்ட லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை தவெக, அதிமுக இரண்டுமே தவறவிட்டு உள்ளன.

தேர்வு ரத்து என்ன காரணம்?

சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வு, அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி ஏற்பட்டதுதான் பிரச்சனையின் தொடக்கம். தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தனத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு என கூறி அவர்கள் வெளியே அனுப்பப்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

மற்ற மாவட்டங்களில் பிரச்சனை இல்லை. சென்னையில் மட்டுமே பிரச்சனை உள்ளது. சென்னையில் சிஎம்சி கல்லூரி, அரும்பாக்கம் செண்டர், நந்தனம் சென்டர் ஆகிய இடங்களுக்கு மட்டும் ஹால்கள் மாறி மாறி வந்துள்ளன. தமிழ்நாடு முழுக்கவே இதனால் தேர்வை ஒத்தி வைத்து உள்ளனர். மற்ற மாவட்ட மக்கள்தான் பாதி தேர்வுக்கு இடையே.. வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக மாறியவைதான் மாநில அளவிலான அரசு தேர்வாணைய தேர்வுகள். மற்ற மாநிலங்களில் பெரிய தேர்தல் பிரச்சனையாக உருவெடுத்த இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டிலும் சரியாக தேர்தல் நேரத்தில் நடந்து உள்ளது.

தேர்வாணையங்கள் vs தேர்தல்

இந்திய மாநில அரசியலில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக பொதுப்பணித் துறை தேர்வாணையங்கள் (PSC) உருவெடுத்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், வெறும் நிர்வாகப் பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட தேர்வு முறைகேடுகள், இன்று ஆளுங்கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் ஆயுதங்களாக மாறியுள்ளன. வினாத்தாள் கசிவு, தேர்வு நடப்பதில் குளறுபடி, தேர்வு முடிவுகளில் தாமதம் மற்றும் முறைகேடுகள் போன்றவை கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மிகப்பெரிய அலைகளையும் உருவாக்குகின்றன.

தெலுங்கானா ஆட்சி மாற்றம்

தெலங்கானா மாநிலத்தின் சமீபத்திய ஆட்சி மாற்றம் இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். பாரத் ராஷ்டிர சமிதி (BRS) வலுவாக இருந்த அந்த மாநிலத்தில், தெலங்கானா மாநில பொதுப்பணித் துறை தேர்வாணையத்தில் (TSPSC) ஏற்பட்ட வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப்போட்டது. குரூப்-1 உள்ளிட்ட முக்கிய தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததால், சுமார் 30 லட்சம் விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாயினர். இந்த இளைஞர்களின் கோபத்தை சரியாகப் புரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, முறையான வேலைவாய்ப்பு காலண்டர் மற்றும் ஊழலற்ற தேர்வாணையம் என்ற வாக்குறுதியை முன்வைத்தது. இது வேலையில்லாத இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, இறுதியில் பி.ஆர்.எஸ் அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ராஜஸ்தான் ஆட்சி மாற்றம்

இதேபோன்ற ஒரு சூழலை ராஜஸ்தான் மாநிலத்திலும் காண முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு சம்பவங்களால் அந்த மாநிலம் தத்தளித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (REET) உள்ளிட்ட பல தேர்வுகள் மீண்டும் மீண்டும் ரத்து செய்யப்பட்டது, ஜெய்ப்பூர் மற்றும் கோட்டா போன்ற நகரங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியான பாஜக இந்த விவகாரத்தைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக மாற்றியது. அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும், மாணவர்களின் மனதில் ஏற்பட்ட நம்பிக்கையற்ற தன்மையே இறுதியில் காங்கிரஸ் அரசு ஆட்சியை இழக்க வழிவகுத்தது.

மத்திய பிரதேச ஆட்சி மாற்றம்

மத்தியப் பிரதேசத்தின் 'வியாபம்' ஊழல், ஹரியானாவின் சி.இ.டி (CET) தேர்வுப் போராட்டங்கள் இரண்டுமே அங்கே ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய (MPPEB) ஊழல் எனப்படும் 'வியாபம்' ஊழல் 2013-லேயே வெளிச்சத்திற்கு வந்தாலும், அதன் அரசியல் தாக்கம் 2018 சட்டமன்றத் தேர்தலில்தான் உச்சத்தை எட்டியது.

மருத்துவ நுழைவுத் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செய்த மிகப்பெரிய முறைகேடு இது. இதில் முறைகேடாக ஆள்மாறாட்டம் செய்தும், லஞ்சம் கொடுத்தும் பலர் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஊழலுடன் தொடர்புடைய நபர்களின் மர்ம மரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி கிடைக்கவில்லை" என்பதையே காங்கிரஸ் தனது முக்கிய பிரச்சாரமாக மாற்றியது. இது அதுவரை சுத்தமான அரசு என்று பெயரெடுத்திருந்த பாஜகவின் பிம்பத்தைச் சிதைத்தது. இதன் விளைவாக, 2018-ல் காங்கிரஸ் நூலிழையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது (இருப்பினும், 2020-ல் சில எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது).

ஹரியானா (2024) ஆட்சி மாற்றம்

ஹரியானா பணியாளர் தேர்வு ஆணையம் (HSSC) மற்றும் பொதுப்பணித் துறை தேர்வு ஆணையம் (HPSC) ஆகியவை கடும் விமர்சனத்திற்குள்ளானதால், அங்கு வேலைவாய்ப்பு என்பது தேர்தலின் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியது.

பொதுத் தகுதித் தேர்வு (CET) தொடர்பான குழப்பங்கள், குளறுபடிகள் மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட 'குரூப் சி' மற்றும் 'குரூப் டி' பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட காலதாமதம் ஆகியவை இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

2024 தேர்தலில், ஆளுங்கட்சியின் செல்வாக்கைக் குறைக்க எதிர்க்கட்சிகள் "கர்ச்சி-பார்ச்சி" (Kharchi-Parchi - லஞ்சம் மற்றும் சிபாரிசுச் சீட்டு) என்ற வாசகத்தைப் பயன்படுத்தின. ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த போதிலும், வேலைவாய்ப்பு தாமதத்தால் ஏற்பட்ட இளைஞர்களின் கோபம் கிராமப்புறங்கள் மற்றும் ஜாட் சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை வெகுவாகக் குறைத்தது.

தமிழ்நாட்டிலும் தேர்வு பிரச்சனை

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நடந்த பிரச்சனைகள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன.

ஊழல், முறைகேடு நடக்கவில்லை என்றாலும் நிர்வாக குளறுபடி நடந்துள்ளதால்.. அதை எதிர்க்கட்சிகள் முறையாக பயன்படுத்தினால் திமுகவிற்கு பிரஷர் தரக்கூடிய சம்பவமாக மாறும். சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வு, அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி ஏற்பட்டதுதான் பிரச்சனையின் தொடக்கம். தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தனத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு என கூறி அவர்கள் வெளியே அனுப்பப்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு மைய அதிகாரிகளுடன் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சென்னை முழுக்க பிரச்சனை இருப்பது தெரிந்ததால்.. தமிழ்நாடு முழுக்க தேர்வு ரத்தானது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு 2026 கால அட்டவணை மற்றும் தற்போதைய நிலை
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, இன்று பிப்ரவரி 8-ஆம் தேதி மதிய அமர்வில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் (தாள் I), பிப்ரவரி 22-ஆம் தேதி பொது அறிவுத் தேர்வும் (தாள் II) நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், இன்றைய குளறுபடிகள் காரணமாக முதல் தேர்வு மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+