ஓபிஎஸ் வைத்த செக்.. உடைப்பாரா எடப்பாடி? மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3
நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீடு வழக்கை விசாரிக்கவுள்ளது.

அதிமுக பொதுக்குழு
கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவானது சினிமா காட்சிகளை போல் திரில்லுடன் நடைபெற்று முடிந்தது. பொதுக்குழுவுக்கு தடை வாங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக போராடியது. ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும் தடை விதித்தது. இதனால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பொதுக்குழுவால் கொண்டுவர முடியாமல் போனது. நள்ளிரவு நடந்த விசாரணையின் முடிவில் ஹைகோர்ட் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

மேல்முறையீடு வழக்கு
இதனால் கடும் அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணையை விரைந்து தொடங்கக் கோரி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் அடிப்படையில் நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீடு மனு மீதான விசாரணையை நடத்துகிறது உச்சநீதிமன்றம். நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இதை விசாரிக்கிறது.

மீண்டும் பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழலில் மீண்டும் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. மேலும், அன்றைய தினமே எடப்பாடி பழனிசாமியை ஏக மனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்ய அவரது தரப்பு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதன் காரணமாகவே மேல் முறையீடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது பழனிசாமி தரப்பு.

எதிர்பார்ப்பு
நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணையில் தீர்ப்பு என்ன மாதிரி வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இதனிடையே சட்ட நுணுக்கங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டீம் வழக்கறிஞர்கள் தீவிர டிஸ்கஷன் நடத்தி வருகிறார்கள்.