மதுரையில் பவரை காட்டணும்.. பரபர ஆலோசனை.. மாநாடு தொடர்பாக திட்டம் தீட்டிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் இந்த மாநாட்டிற்கு 'வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு' என பெயரிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 9ஆம் தேதி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கான கால்கோள் விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்திருந்தனர். பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
மதுரை மாநாட்டு குழுவுடன் காலை 10 மணிக்கு ஆலோசனை தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்காக மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு வரப்பட்டன. அதனை எடப்பாடி பழனிசாமி உட்பட குழு உறுப்பினர்கள் பார்த்து இறுதி செய்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மதுரை மாநாடு எப்படி அமைய வேண்டும், அதில் கலந்து கொள்ளும் தொண்டர்களைத் திரட்டும் பணிகள், மாநாட்டு நிகழ்வுகள் எப்படி அமைய வேண்டும் மற்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பெருந்திரளாக தொண்டர்களை திரட்டி வர வேண்டும் என்று மதுரை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்டம்தோறும் பேருந்துகள் முன்பதிவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications