தாயார் மறைந்த செய்தியால் வருத்தமுற்றேன்! ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்- எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வத்தின் தாய் இறப்பிற்கு அதிமுகு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாய் பழனியம்மாள் இறப்பிற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள். அவருக்கு 95 வயதாகிறது. இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் ஓபிஎஸ்ஸுடன் வசித்து வந்தார். இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பழனியம்மாள் பாதிக்கப்பட்டார். அவரை தேனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அதிமுக பொதுக் குழு வழக்கில் நேற்று முன் தினம் வந்த போதுதான் தனது தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை ஓபிஎஸ் அறிந்தார்.

சென்னை டூ தேனி
இதையடுத்து சென்னையிலிருந்து தேனிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். இந்த நிலையில்தான் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தாய் பழனியம்மாள் மறைந்தார். தாயாரின் உடலை பார்த்து ஓபிஎஸ்ஸின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாயின் காலை பிடித்தபடியே அவரது காலில் விழுந்து சிறிது நேரம் அழுதார். இதையடுத்து அவருக்கு அங்கிருந்தவர்களும் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தேற்றி ஆறுதல் கூறினர்.

ஓபிஎஸ் தாயார் மறைவு
இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரில் சென்று ஓபிஎஸ்ஸின் தோளை பிடித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவை சேர்ந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

2021 சட்டசபை தேர்தல்
குறைந்தபட்சம் நேரில் போகாவிட்டாலும் அறிக்கையாவது வெளியிடுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. 2021 சட்டசபை தேர்தலின் போது ஓபிஎஸ்ஸின் தாயாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆசிர்வாதம் பெற்றார். ஓபிஎஸ் விபூதி எடுத்து கொடுக்க அதை பழனியம்மாள் நெற்றியில் பூசிவிடுகிறார். எனவே ஏற்கெனவே தாயை இழந்த எடப்பாடி பழனிசாமிக்கு பழனியம்மாள் தாய் ஸ்தானத்தில் இருந்து ஆசி வழங்கினார்.

ஓபிஎஸ்ஸுக்காக வேண்டாம்
ஓபிஎஸ்ஸுக்காக இல்லாவிட்டாலும் அந்த தாய் பாசம், பந்தத்திற்காகவாவது இரங்கல் அறிக்கையை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. கட்சி ரீதியில் எலியும் பூனையுமாக இருந்தாலும் ஒரு வீட்டில் நல்லது கெட்டது என்றால் உடனே வாழ்த்துவதும் இரங்கல் தெரிவிப்பதையும் அரசியல்வாதிகள் பின்பற்றி வருகிறார்கள். இது அரசியல் நாகரீகம் மட்டுமல்லாமல் மனிதநேயமும் கூட!

எடப்பாடி பழனிசாமி
நல்லதுக்கு செல்லாவிட்டாலும் இறப்பிற்காவது செல்ல வேண்டும் என ஒரு சொலவடை இருக்கிறது. ஓபிஎஸ் மனைவி மறைந்த போது எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்ஸுக்கு பக்கபலமாக இருந்தனர். தனது பலமான மனைவி இறந்ததால் உடைந்து போயிருந்தவர்களை தேற்றியதும் அவர்களே! அது போல் கடந்த சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமியின் தாய் தவுசாயி அம்மாள் (93) இறப்பிற்கு துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியின் தாயாரின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஓபிஎஸ்ஸின் தாயாரின் இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிடுவாரா என்ற எதிர்பார்த்த போது எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தாயார் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர் செல்வம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications