தாறுமாறு குஷி.. ஆளுநர் சொன்னதுமே.. பலே எடப்பாடி பழனிசாமி.. தன்வினை தன்னை சுடுதா? சிதறுதா திமுக ஓட்டு
சென்னை: "அதிமுக -பாஜக சீக்ரெட் டீலிங்"கில் இருந்து வருவதாக திமுக தரப்பு தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, மெகா கூட்டணிக்கு தயாராகி வருகிறார்.. ஆனால், இதுவரை ஒரு கட்சிகூட, தன்னுடைய வெளிப்படையான ஆதரவை அதிமுகவுக்கு தரவில்லை என்பதே உண்மை.

சொந்த கூட்டணியிலுள்ள, தமாகா வாசன், ஜான்பாண்டியன், ஏசி சண்முகம், டாக்டர் கிருஷ்ணசாமி, போன்றோரெல்லாம் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதுவரை அதிமுகவுனான கூட்டணியை அறிவிக்கவில்லை.
யாருடன் கூட்டணி: அதேபோல, திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியையும், அதிமுக பக்கம் கொண்டு வர முடியவில்லை.. அதேபோல, வேறு புது கட்சிகளுடனும் கூட்டணி அமையவில்லை.
ஒருவேளை, அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + தேமுதிக + டாக்டர் கிருஷ்ணசாமி, இவைகளுடன் பாஜக கூட்டணி அமைத்தால், எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எப்படி எதிர்கொள்வார் என்ற சந்தேகமும், எதிர்பார்ப்பும் நிலவிக்கொண்டே இருக்கிறது.
வியூகங்கள்: கூட்டணி விவகாரம் இப்படியென்றால், அதிமுக முன்னெடுக்கும் வியூகங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகத்தான், பாஜகவை கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்டார். ஆனால், அதற்கு பிறகு, சிறுபான்மையினர் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லையாம்.
இதற்கு மூலக்காரணமே, திமுகதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது நாடகம் என்றும், அரசியல் ஸ்டண்ட் என்றும் திமுக கூட்டணி விமர்சித்து கொண்டிருக்கிறது.. திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரிக்கவே, அதிமுக இப்படியெல்லாம் நாடகமாடுகிறது என்றும் விமர்சித்து வருகிறது.
திமுகவின் இந்த பிரச்சாரத்தினால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "பாஜகவுடன் கூட்டணி முறிந்தது, முறிந்ததுதான், இனி இணைய வாய்ப்பேயில்லை" என்று போகிற இடமெல்லாம் இன்று பதிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிகிறது.
ஆளுநர் கையெழுத்து: இதேபோல, ஆளுநர் விவகாரத்திலும் ஒரு சலசலப்பு கிளம்பியது.. ஆரியர், திராவிடர் குறித்த ஆளுநரின் கருத்துக்குகூட, எடப்பாடி பழனிசாமி இதுவரை, ஒரு வார்த்தை எதிர்த்து பேசவும் இல்லை, ஆதரித்து பேசவும் இல்லை.. சித்தாந்த ரீதியான மோதலில் கவர்னருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லாததை, திமுக இப்போதுவரை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கிறது.
இப்படி நாலாபக்கமும் அதிமுகவுக்கு புகைச்சல்கள் கிளம்பி உள்ள நிலையில், அத்தனைக்கும் தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்த கூடுதல் தகவல்கள்தான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள்: நேற்றைய தினம், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.. இந்த கூட்டம் முடிந்ததும், மாநில பொறுப்பில் இருக்கும் சீனியர்களிடம் தனியாக மனம் திறந்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. குறிப்பாக, கவர்னர் கொடுத்துள்ள ஒப்புதல் பற்றிய விவகாரத்தை மாவட்ட செயலாளர்களிடம் போகிற போக்கில் பேசியிருந்த எடப்பாடி, சீனியர்களிடம் நேற்றைய தினம் மனம்திறந்து பேசியிருக்கிறார்.
அப்போது, மாஜிக்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதியளித்திருக்கும் விவகாரம் குறித்து சுட்டிக்காட்டி விட்டு, " இப்படி நடப்பது ஒரு வகையில் நம்மில் பலருக்கும் சிக்கல் வரும் . அதாவது விசாரணை என்று வந்தால் கண்டிப்பாக கைது நடவடிக்கை நடக்கும். அதனால் சிக்கல்கள் ஏற்படும். அது நமக்கு சிக்கல் தான். இவர்களோடு இந்த நடவடிக்கை நின்றுவிடாது. மற்றவர்களை நோக்கியும் பாயும். அதில் நானும் கூட விதிவிலக்கல்ல !
சிறுபான்மையினர்: அதேசமயம், ஒரே ஒரு நன்மை நமக்கு கிடைத்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக நாம் சொல்வதற்கும், அதை மக்கள் நம்புவதற்கும் வசதியாக இருக்கும். சிறுபான்மையினர் இனி நம்மை முழுமையாக நம்புவார்கள்.
ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்பதால்தான், இத்தனை நாட்களும் "அதிமுக -பாஜக சீக்ரெட் டீலிங்" கில் இருப்பதாக திமுக பரப்பி வந்தது. இனி திமுகவால் அப்படி சொல்லவே முடியாது. திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தை கவர்னரின் கையெழுத்து உடைத்து விட்டது. தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நன்மை செய்துள்ளது மத்திய அரசு.
ரெடியா இருங்க: பாஜக - அதிமுக கூட்டணி இல்லை என்பதை இனி நாம் அழுத்தமாக பிரச்சாரம் செய்யமுடியும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதனை நீங்களும் பரப்ப வேண்டும். கட்சியின் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கொண்டு செல்லுங்கள். இது மட்டுமல்ல, திமுகவும் நமக்கு எதிராக ஆக்ஷன் எடுக்கும். கைது நடவடிக்கைகள்கூட நடக்கலாம். தைரியமாக இருக்க வேண்டும். சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்று பேசினாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications