ஊழலை பேச தகுதி இல்லை! உதய் மின் திட்டத்தை அனுமதித்தது ஏன்? எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு கேள்விகணைகள்
எத்தனை முகமூடி போட்டுக்கொண்டு வந்தாலும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை:
மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் தமிழர் நலனை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். கூட்டணி தர்மத்தை நாங்கள் மதிக்கிறோம். அதிமுகவை போல அவர்களிடம் இருந்து தொகுதியை பறித்து போட்டியிடவில்லை என்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக தோல்வியடைவது நிச்சயம் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டு வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் என்ன நடந்தது என்று இந்த நாடு அறியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் தமிழ்நாட்டை உதய் திட்டத்தை இணைக்கவிடவில்லை. அதன்பிறகு உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்த பிறகு ஏற்பட்ட மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட கேடுகளை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான எந்தவித நன்மைகளையும் எடப்பாடி பழனிச்சசாமி அரசு செய்யவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. தமிழ்நாட்டு மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்த துரோகங்களை மறக்க முடியாது.
ஊழலைப்பற்றி பேசுவதற்கு அதிமுகவிற்கு எந்தவிட அறுகதையும் இல்லை. குட்கா, போதைப்பொருளைப்பற்றி பேசுகிறார்கள். இதை கேட்டால், ருத்ராட்ச பூனைகளைப்பற்றிதான் நினைவுக்கு வருகிறது. திமுக ஆட்சி இன்றைக்கு சிறப்பாக நடக்கிறது. சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் சந்தி சிரித்தது. எதையும் மனச்சாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.
எத்தனை முகமூடிகளை போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்தாலும் பூகம்பத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக களம் காணும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி. அதிமுகவிற்கு தக்க பாடத்தை ஈரோடு தேர்தல் களம் புகட்டும் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்கள் முகாமிட்டிருப்பது குறித்து அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்குநேரி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்த போது அப்போதைய அதிமுக அமைச்சர்கள் வந்தார்களே? அவர்கள் இப்போது கேள்வி கேட்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications