கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு எடப்பாடி ஆறுதல்! சரமாரி குற்றச்சாட்டு!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அடுத்தடுத்து பலர் பலியாகினர். அங்கு தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் கள்ளச்சாராய பலி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. சட்டசபையில் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுக்க எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று சட்டசபைக்கு செல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 90க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார்.
இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று சட்டசபை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!" எனத் தெரிவித்தார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி சென்ற எடப்பாடி பழனிசாமி,விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். மேலும், விஷச்சாராயம் குடித்து பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது.
அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன." எனக் குற்றம்சாட்டி உள்ளார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications