”பிரதமர் மோடியை வரவேற்க செல்லும் எடப்பாடி பழனிசாமி” அதிமுக எம்பி தம்பிதுரை சூசகமாக சொன்ன பதில்!
சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்க உள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமா் மோடி விமானம் மூலம் மதுரை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சின்னாளம்பட்டி கிராமத்திற்கு வரும் மோடி, காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் செல்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் டெல்லி முகமாக பார்க்கப்படும் தம்பிதுரை முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

மோடி - இபிஎஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை அதிமுகவின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி சந்திக்க முயற்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பிரதமரை வரவேற்க நேரில் செல்ல இருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை பேட்டி
இதுகுறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மாநிலங்களவையில் மத்திய அரசு அளிக்கும் உறுதிமொழிகள் எல்லாம் செயல்படுத்துகிறதா என்பதை பார்க்கப்பதற்காக மத்திய அரசின் உறுதிமொழி குழு தலைவராக பதவி தனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் பற்றி ஆராய்ந்து, அதனை செயல்படுத்த தேவையான அறிவுறுத்தல்களை வழங்க முடியும். இதனை நல்ல வாய்ப்பாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

மோடியை வரவேற்கும் இபிஎஸ்
தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரை செல்கிறார். அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணியாக இருக்கின்றன. அதனால் கூட்டணி கட்சியின் தர்மம் காரணமாக வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

அரசியல் முக்கியத்துவம்
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த சூழலில் மத்திய அரசின் மிகமுக்கிய ஒருவர் இங்கு வரும்போது அவரை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனிடையே பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மூன்று மணியளவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications