எடப்பாடி போட்ட ‘ஆர்டர்’.. அண்ணாமலையை சந்தித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள்.. இதான் மேட்டரா?
சென்னை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பின்னர் பாஜக வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெற்றது. இந்நிலையில், எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. அண்ணாமலை அதிமுகவை சீண்டி வந்ததால், அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பினாலே எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார். இதனால், பாஜக அதிமுக கூட்டணி முறியுமா என்ற சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இடையே சமரசமும் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை என எடப்பாடி பழனிசாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தது எடப்பாடி தரப்பு. பின்னர் பாஜக வேண்டுகோளை ஏற்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றது. ஓபிஎஸ் அணியினரும் 3 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பின்னர் திரும்பப் பெற்றனர்.
அண்ணாமலை தான் கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளராகச் செயல்படுகிறார். அண்ணாமலை கூட்டணியில் இருக்கும் தங்களின் ஆதரவைக் கேட்டுக்கொள்ளாததன் காரணமாகவே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்துக் களமிறங்க முடிவு செய்தனர். பின்னர் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் டெல்லி அமித் ஷாவுடன சந்திப்பிற்குப் பிறகு ஈபிஎஸ், பாஜகவுடன் நெருக்கத்தை கடைபிடித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி உத்தரவையடுத்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை கர்நாடாகவில் நேற்று சந்தித்துள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக கர்நாடக மாநில அதிமுக மாநிலச் செயலாளர் எஸ்.டி. குமார், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைச் சந்தித்தார். அப்போது 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் ஆதரவை கர்நாடக பாஜக கோரியிருந்த நிலையில், அதிமுகவின் கர்நாடக மாநில தலைவர்களும் தொண்டர்களும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்தனர்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications