"கிரிமினல்" அவதூறு வழக்கு.. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி
சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

பேச்சு: தேர்தல் சமயத்தில் மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரங்கள் நடந்தது. அப்போது சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் அதிமுக சார்பில் ஏப்ரல் 15ஆம் தேதி பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இங்கு நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர் தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார். எம்பியாக உள்ள அவர், தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் சுமார் 75 சதவீத நிதியைச் செலவே செய்யவில்லை" என்று பேசியிருந்தார்.
வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிராகத் தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.. உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் என்றும் இது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் என்ற தயாநிதி மாறன், நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள நற்பெயருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தயாநிதி மாறன் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதாகவும் இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கைத் தயாநிதி மாறன் தொடர்ந்து இருந்தார்.












Click it and Unblock the Notifications