இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்ய துணியக்கூடாது.. அப்படி நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
சென்னை: நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என மணிப்பூர் கொடூரச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் வண்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை கும்பலால் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற இழிச்செயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிப்பூர் மாநில முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications