கஜா பாதிப்பு.. திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை ஆய்வு.. ரயிலில் கிளம்பினார் முதல்வர்
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு அவர் ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், கடந்த 20ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் நோக்கத்தில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்றார் முதல்வர்.

அங்கே சேதங்களை பார்வையிட்ட பிறகு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சென்றார். ஆனால், கடுமையான மழை பெய்வதன் காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சென்னை திரும்பினார். ஆனால் முதல்வர் அங்கேயே தங்கியிருந்து அடுத்த நாளாவது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
மற்றொரு நாளில் நான் விடுபட்ட மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடுவேன் என்று முதல்வர் உறுதியளித்தார். அதன்படி மீண்டும் நாளை விடுபட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர்.
இதையொட்டி இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டுச் சென்றார். நாளை காலை அவர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கார் மூலமாக சாலை மார்க்கமாக சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார்.
அப்போது புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணத் தொகையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணத் தொகையும் முதல்வர் வழங்க உள்ளார்.












Click it and Unblock the Notifications