முதியோர் ஓய்வூதியம் 2,000.. கல்விக்கடன் தள்ளுபடி.. 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி
சென்னை: அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 5 தேர்தல் வாக்குறுதிகள் அளித்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 5 அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டுள்ளார்.
இதன்படி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 ஆம் கட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என வேகம் எடுத்துள்ளன. அதன்படி அதிமுக இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளையும் அதிமுக தெரிவித்து வருகிறது. அதன்படி ஏற்கனவே 5 வாக்குறுதிகளை அதிமுக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 5 வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கல்விக்கடன் ரத்து, இலவசமாக 3 சிலிண்டர்கள்
* முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக அதிகரிக்கப்படும்.
* ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
* மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்
* தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.
முதல்கட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள்
* அதிமுக ஆட்சிக்கு வந்தால், குலவிளக்கு திட்டம் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.
* பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவச பயணம்.
* 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
* 5 லட்சம் பெண்களுக்கு 'அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்' கீழ் ₹25,000 மானியம் வழங்கப்படும்.
* வீடற்ற ஏழைகளுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
அதிமுக இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள் முழு விவரம்:
எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழக மக்களின் பேரன்பைப் பெற்று, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்:
1. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு:
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு. முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. கல்விக் கடன் தள்ளுபடி
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.
3. வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் :
வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு. ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
4. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்:
* தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
* அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
5. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி:
* இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications