பாஜக அல்லது தவெக.. அதிமுகவுக்கு வலிமையான கூட்டணி கட்சி யார்? எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில்
சென்னை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக வலிமையான கூட்டணி கட்சியா அல்லது நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக வலிமையான கூட்டணி கட்சியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் பதில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அதிமுக என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேபோல் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று 3 முறை அமித்ஷா பேசி இருக்கிறார். ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தவெகவை விரும்பும் அதிமுக
அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தவெக தரப்பில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளைக் கடந்து, வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைதி காக்கும் தவெக, அதிமுக
இதன் காரணமாகவே அதிமுகவை விமர்சிக்காமல் விஜய் கடந்து போவதாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், விஜயை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதற்குப் பின் கூட்டணி கணக்கு இருக்குமோ என்ற கேள்வி இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
தவெக - அதிமுக பேச்சுவார்த்தை
அதேபோல் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக, அதிமுக தரப்பில் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பேசப்பட்டன. அந்த பேச்சுவார்த்தையில் தவெக தரப்பில் அதிகளவிலான தொகுதிகள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதால், அதிமுக பின் வாங்கியது. ஆனால் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தவெகவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முயற்சி
அதிமுக தரப்பில் எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் மூலமாக எடப்பாடி பழனிசாமியும் இதனை நன்கு அறிந்தே வைத்திருக்கிறார். திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்றால், தேர்தல் முடிவுகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தவெகவை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
வலிமையான கூட்டணி யார்?
இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டி அளித்திருக்கிறார். அதில் பாஜக மற்றும் தவெக.. இருவரில் யார் வலிமையான கூட்டணி? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக ஒரு தேசியக் கட்சி. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பலம் இருக்கிறது. அதனால் கட்சிகளுக்கு இடையிலான பலத்தை ஒப்பிட முடியாது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த மனநிலையில் உள்ள கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications