ரைட்டு, ரொம்ப சந்தோஷங்க.. இதெல்லாம் பெரிய சாதனை.. பெல்லியம்மாளுக்கு போனை போட்ட எடப்பாடி.. பூரிப்பு
ஆஸ்கர் விருதினை வென்ற 'தி எலிபெண்ட விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் முக்கிய பாத்திரமான பெல்லியம்மாளை எடப்பாடி பழனிசாமி செல்போனில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை 'தி எலிபெண்ட விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் வென்றது. இந்நிலையில், இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட யானையை வளர்த்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெல்லியாம்மாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஒரு யானை குட்டி.. அதுவும் அதை வளர்ப்பவர்களின் கதையும்தான் இந்த ஆவணப்படம். இது வெறுமென இரு தரப்பினரை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து செல்லாமல், இரு தரப்பினரும் இணையும் உணர்வுப்பூர்வமான புள்ளியை மையமாக வைத்து கதை நகர்ந்திருக்கிறது. யானைகள் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், யானை குட்டி குறித்து பலருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஒரு குட்டி யானை காட்டில் என்னவெல்லாம் செய்யும்? அது தன் தாய் மற்றும் குழுவினரை விட்டு பிரியும் அளவுக்கு சேட்டை செய்யும்.

அது உடல் முழுக்க காயங்கள் ஏற்படும் வகையில் பல இடர்பாடுகளை சந்திக்கும். அடர்ந்த காட்டிலிருந்து பிரிந்து மனிதர்கள் வசிக்கும் பகுதியில் மனிதர்களோடு சேர்ந்து வசிக்கும் அளவுக்கு குட்டி யானையின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். இந்த கதையைதான் 'தி எலிபெண்ட விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் அழகாக விவரித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த படமே 41 நிமிடங்கள்தான். ஆனால் இதற்கு பின்னர் சுமார் 6 ஆண்டுகள் உழைப்பு இருப்பதாக படக்குழு கூறியிருக்கிறது.
ஒரு காட்டை யானை கூட்டங்கள் சேர்ந்து உருவாக்கிவிடும். காடு போதும் மனிதனின் அனைத்து தேவைகளுக்கும். ஆனால் மனிதர்கள் சேர்ந்து எந்த யானை கூட்டத்தையும் உருவாக்க முடியாது. இருப்பினும் தாயை பிரிந்து வந்த யானை குட்டியை அதன் காயங்களை ஆற்றி பராமரிக்க முடியும் என்பதை படக்குழுவினர் நேர்த்தியாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். குட்டி யானையின் குணாதிசயங்களையும், மனிதர்களுடன் ஒன்றிப்போக முயன்று அது செய்யும் சேட்டைகளும், இதனை வளர்க்கும் பெல்லியம்மாள் தம்பதியினர் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பேச ஒரேயொரு ஆவணப்படம் மட்டும் போதாது என்று இதை பார்ப்பவர்கள் தெரிந்துக்கொள்ளவார்கள்.
சாதாரண விஸ்காம் மாணவியாக தனது ஆவணப்பட கனவை தொடர்ந்த கார்த்திகிக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது தமிழக இளம் படைப்பாளிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பெல்லியம்மாள் தம்பதியினர்தான். இவர்களை கவுரவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவர்களுக்கு சால்வை அணிவித்து, வெகுமதியளித்திருந்தார். அதேபோல இவர்கள் வீடு கட்டுவதற்கான நிதியையும் அறிவித்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பெல்லியம்மாளுக்கு செல்போன் மூலம் அழைத்து வாழ்த்து கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.

எடப்பாடி பூரிப்பு
எடப்பாடி பழனிசாமி, நேரடியாகவே பெல்லியம்மாளுக்கு போனை போட்டு பேசியுள்ளார்.. எடப்பாடி பேசும்போது, "ரொம்ப சந்தோஷங்க. ஆஸ்கர் விருது கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்.. மிகப்பெரிய சாதனை இது.. தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பெருமையும்கூட.. ஆஸ்கர் விருது என்பது நமக்கு கிடைச்ச அங்கீகாரம்" என்றார்.. இதைக் கேட்டதுமே பூரித்துபோன பெல்லியம்மாள், ரொம்ப நன்றிங்க.. ஐயா.. தேங்க்ஸ்" என்றார்.. உடனே எடப்பாடி, ரைட்டு, ரைட்டு என்று சொல்லியபடியே போனை துண்டித்தார்.. இந்த உரையாடல்தான், இணையத்தில் வீடியோவாகவும் வெளியாகி உள்ளது.. நாலாபக்கமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருவதால், பூரிப்பில் திக்குமுக்காடி திணறி கொண்டிருக்கிறார் பெல்லியம்மாள்..!!!












Click it and Unblock the Notifications