''மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக அரசு''! வெட்கக்கேடானது என வெளுத்து வாங்கும் எடப்பாடி பழனிசாமி!
மத்திய அரசை எதிர்ப்பது போல் சுய லாபத்திற்காக ஸ்டாலின் நடிப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
சென்னை: என்.எல்.சி. விவகாரத்தில் மத்திய அரசின் கட்டளையை ஏற்று ஆட்சியாளர்கள் கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக ஆட்சியாளர்கள் நடிக்க மட்டும் செய்வதாக அவர் சாடியுள்ளார்.
அதிமுகவினரை பாஜகவின் கொத்தடிமைகள் என திமுக இதுவரை விமர்சித்து வந்த நிலையில் முதல் முறையாக திமுக அரசை மத்திய அரசின் கொத்தடிமை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது தான் இதில் ஹைலைட்.

நெய்வேலி அனல் மின் நிலையம்
நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன் நிலக்கரி சுரங்கமும் நாட்டின் மின்சாரத் தேவைக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனும் முக்கியம். NLC நிறுவனம் துவங்கிய 1956-ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை அதன் வளர்ச்சிக்காக நிலத்தைக் கொடுத்த அப்பகுதி மக்களின் எந்தத் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.

மத்தியில் யார் ஆட்சி
நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்டாலும், நாட்டு நலன் கருதி நிலம் அளித்த மக்கள் இன்னும் துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். மக்களின் இந்தத் துயரைப் போக்க, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவ்வப்போது குரல் கொடுக்கப்பட்டது.

பங்குகளை வாங்கிய தமிழக அரசு
காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி புரிந்தபோது NLC நிறுவனம், தனது பங்குகளை தனியாருக்கு விற்க முன்வந்த போது, ஒரு பொதுத் துறை நிறுவனம் தனியார் கைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் எண்ணத்தில்அம்மா அவர்கள் அந்தப் பங்குகளை தமிழக அரசின் சார்பில் வாங்கினார்கள். 2000-வது ஆண்டு முதல் இன்று வரை NLC-யின் விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நிலம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்போ முழுமையாக வழங்காத அவலம் நிலவி வருகிறது.

வன்மையாகக் கண்டிக்கிறேன்
இந்நிலையில் நேற்று (9.3.2023), கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்களை சிறைவைத்துவிட்டு, DIG மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் NLC நிர்வாகம் ஈடுபட்டதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பாதிக்கப்படும் மக்களின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சந்தேகம் எழுகிறது
10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, NLC நிர்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த 22 மாதகால விடியா ஆட்சியில் NLC-யின் மக்கள் விரோதப் போக்குக்கு உறுதுணையாக இருந்து தாலாட்டு பாடிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடலூர் மாவட்ட திமுக அமைச்சர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட மக்களையும், விவசாயிகளின் நலனையும் மதிக்காத இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அடாவடித்தன செயல்
NLC நிறுவனத்தின் அடாவடித்தனமான செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை தன்னுடைய ஏவல் துறையான காவல் துறையை விட்டு நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சமாகும். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவைகளைப் பெருக்குவோம். இதனால் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டிற்கான நிலக்கரித் தேவை குறையும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் கொத்தடிமைகள்
இந்நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை NLC நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுபோல் தங்களது சுய லாபத்திற்காக நடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் NLC விவகாரத்தில் அதே மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமைகளாக செயல்படுவது வெட்கக்கேடானதாகும். தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை, அடக்குமுறையை ஏவி பணிய வைக்கும் போக்கை இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

உயிர்நாடிப் பிரச்சனை
எல்லா பிரச்சனைகளிலும் மெத்தனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையிலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.












Click it and Unblock the Notifications