சென்னையில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாட்டில் பல SIRகள்! அட்டாக்கை ஆரம்பித்த எடப்பாடி!
சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர் என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது உடன்படிக்கும் மாணவி ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற அவர், அதற்கு பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக சிறுமி மாயமானதாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்ட பதில் வீனஸ் நகரில் சிறுமி இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து அங்கு போலீசார் சென்றபோது சிறுமியுடன் மேலும் இரண்டு சிறுமிகளும் அவர்களுடன் மேலும் சில சிறுவர்களும் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதை அடுத்து மூன்று சிறுமிகளை மீட்ட போலீசார் முத்தியால்பேட்டை மகளிர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். சிறுமியின் காதலன் என பழகி பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதில் ஒருவர் மீது ஏற்கனவே 11 வழக்குகளும், மற்றொருவர் மீது ஆறு வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது ஆறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர் என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.
"SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications