அரசு மருத்துவமனையிலேயே ரௌடிகள் அட்டகாசம்.. கும்பகர்ண தூக்கத்தில் திமுக அரசு.. விளாசும் எடப்பாடி!
சென்னை: திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என, ரௌடிகள் அட்டகாசம் செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கைதிகளை விடுவிக்கக் கோரி, அந்த மருத்துவமனையின் உபகரணங்களை ஒரு கும்பல் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக மயிலாப்பூரைச் சோ்ந்த சைக்கோ சரண், மந்தைவெளியைச் சோ்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரெளடிகளை அபிராமபுரம் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவா்களை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனா்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அங்கு வந்த அந்த ரெளடிகளின் ஆதரவு கும்பல், திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது.
மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி, பிளேடுகளால் தங்களது உடல்களை அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தனர். இதைக் கண்டு சிகிச்சைக்காக வந்திருந்தவா்களும், மருத்துவமனை பணியாளா்களும் அலறி அடித்து ஓடினா். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளால் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் மருத்துவமனை உபகரணங்களை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது.
இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications