அப்பாவு செய்த அதிரடியால் எடப்பாடி பழனிசாமிக்கு செம்ம ஹேப்பி.. நேற்று சட்டசபைக்கே வராமல் போன ஓபிஎஸ்
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று சட்டசபைக்கே ஓபிஎஸ் வரவில்லை. அதேநேரம் எடப்பாடி மகிழ்ச்சி அடைந்துள்ளார்
அதிமுக 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக மதுரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் அ.தி.மு.க. சார்பில் கடிதம் கடந்த 2012ம் ஆண்டு இறுதியில் கொடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து வந்தார். இதுகுறித்து சட்டசபை கூடும் போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி, இருக்கையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் இதனை ஏற்காத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்து எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் 4 முறை கடிதம் வழங்கியுள்ளோம். பலமுறை நேரில் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கட்சி உறுப்பினர்களால் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை நிறைவேற்றித் தரவேண்டும்" என்றார்.
இந்த நேரத்தில் எழுந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று சபாநாயகர் அப்பாவுவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரும், நிச்சயம் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்..
இந்த நிலையில், நேற்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டது. அதாவது, எடப்பாடி பழனிசாமி அருகே 206 எண் கொண்ட இருக்கையில் இருந்த அவர், தற்போது முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இருந்த 207 எண் கொண்ட இருக்கைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதாவது, முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு மாற்றப்பட்டார்.
இருக்கை மாற்றப்பட்ட நிலையில், நேற்று அவைக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனுக்கும் இருக்கை மாற்றப்பட்டிருக்கிறது. இதேபோல், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், சட்டசபையில் அவருக்கு இருக்கை மாற்றப்பட்டது. அமைச்சர் வரிசையில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போது ஆர்பி உதயகுமார் அமர்ந்துள்ளார். நீண்ட நாள் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிறைவேற்றியதால், எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதேநேரம் முதல் வரிசையில் இருந்த ஓபிஎஸ், இப்போது இரண்டாவது வரிசைக்கு போவதை தாண்டி, நீதிமன்றத்திலும் சரி, சட்டசபையிலும் சரி எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றிருக்கிறார்..












Click it and Unblock the Notifications