பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக தொகுதிகளை கொடுத்துள்ளதாக தேமுதிகவை சீண்டி இருக்கிறார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமையாக இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 27 நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் முடித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பாஜகவின் தமிழிசை செளந்தரராஜனும் எடப்பாடி பழனிசாமியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுகவின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. நமது கூட்டணி கட்சிகளை 3 நாட்களுக்கு முன் கட்சி அலுவலகத்திற்கு அழைத்தோம். அப்போது தொகுதி பங்கீட்டை முடித்து, அடுத்த நாளிலேயே தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். இன்று எந்தெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்று பேசி முடிவு எடுத்து அறிவித்துவிட்டோம்.
அதேபோல் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஆனால் திமுகவின் நிலை என்ன? கூட்டணி அமைப்பதற்கே 20 நாட்களாக போராடினார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறிக் கொண்டிருக்கிறது. போராடியே தொகுதியை பெறும் நிலை உள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அடிமையாக உள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லும் திமுக கூட்டணி கட்சிகள், 2021 தேர்தலை விடவும் குறைவான இடத்தையே பெற்றிருக்கிறார்கள். இதனை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தேர்தலில் உங்களுக்கு தகுந்த அந்தஸ்து கொடுக்காத கட்சி திமுக.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடி பார்த்தார்கள். விசிகவும் எவ்வளவோ போராடி 8 தொகுதிகளை மட்டுமே பெற்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு அதிக இடம்.. அங்கீகாரம் உள்ள விசிகவுக்கு குறைந்த தொகுதிகள்.. திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். இதனால் மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தமிழிசைக்காக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதனால் மயிலாப்பூரில் தமிழிசை போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications