"நாங்க இப்படித்தான், இரட்டை வேஷம் போட மாட்டோம்!" இஃப்தார் விருந்தில் எடப்பாடி சொன்ன மெசேஜ்!
சென்னை: சிறுபான்மையின மக்களிடம் அதிமுக இரட்டை வேடம் போடாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்களின் நலனுக்காக வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமில்லாமல் அதனை கடைபிடித்து செயல்படுத்தக் கூடிய கட்சி அதிமுக என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

இப்தார் விருந்து
அதிமுக சார்பில் சென்னையில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். பள்ளிவாசல்களுக்கு நோன்புக்கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் கடந்த 2001 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டு பேசினார்.

நாகூர் தர்கா
இஸ்லாமியர்களின் ஆன்மிக தலங்களில் ஒன்றான நாகூர் தர்காவுக்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு சந்தனக் கட்டைகள் வழங்கும் நடைமுறையும் அதிமுக ஆட்சியின் தான் தொடங்கப்பட்டது என்றும் தங்களை பொறுத்தவரை இஸ்லாமியர்களிடம் இரட்டை வேடம் போடாமல் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல் உண்மையிலேயே சிறுபான்மையின மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஓ.பி.எஸ். பேச்சு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் தான் அதிமுக பயணிப்பதாகவும் அவரது வழியில் நின்று இஸ்லாமிய மக்களின் நலனுக்கு அதிமுக தொடர்ந்து பாடுபடும் எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை பொறுத்தவரை இடைவிடாது தொடர்ந்து நடத்தி வரும் கட்சி அதிமுக தான் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இஃப்தார் விருந்து
திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, என தமிழகத்தின் பிரதான கட்சிகள் பல இப்தார் விருந்தை நடத்தி முடித்துள்ளன. பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் வேளையில் நோன்பை களைவதே இப்தார் நேரம் ஆகும். அந்த நேரத்தில் விருந்து கொடுக்கப்படுவதால் இப்தார் விருந்து என பெயர்க்காரம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications