5 பேர் பலி.. ஒரு நிகழ்வை கூட உருப்படியா நடத்த முடியல.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி!
சென்னை: சென்னையில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்வை நேரில் காணச் சென்ற 5 பேர் பலியான நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான திமுக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன.

இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 13 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர். இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கமடைந்தாகவும், அதோடு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.
இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன, ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த ஸ்டாலின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications