ஸ்டாலினின் சுந்தரா டிராவல்ஸ் பேச்சு.. பச்சை நிற வாகனத்தை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பச்சை நிற வாகனத்தை, சுந்தரா டிராவல்ஸ் பஸ் என்று முதல்வர் ஸ்டாலின் கிண்டல் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெள்ளை நிற பிரச்சார வாகனத்தில் மக்களைச் சந்தித்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக சுமார் ஓராண்டுக்கு முன்பாகவே தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து வருகிறார். கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

"மக்களைச் சந்திப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்து வரும் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பிரத்யேகமாக ஒரு பேருந்து வடிவமைக்கப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் உருவாக்கப்பட்ட பேருந்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
பேருந்தின் முன் பக்கம் இருந்தவாறு எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்தித்து வந்தார். ரோடு ஷோக்களின் போது கூட எடப்பாடி பழனிசாமி நடந்து செல்லாமல், பேருந்தின் முன் பக்கம் அமர்ந்து மக்களுக்கு வணக்கம் கூறி சென்றார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேருந்தை முதல்வர் ஸ்டாலின், சுந்தரா டிராவல்ஸில் வரும் பேருந்து என்று கிண்டல் செய்திருந்தார்.
அதில் ஸ்டாலின், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பழைய பஸ்ஸை போல் ஒரு பஸ்ஸை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு எடப்பாடி பழனிசாமி.. அந்த பேருந்தில் இருந்து புகை வருவதைப் போல், எடப்பாடி பழனிசாமி வாயிலிருந்து பொய்கள் வருவதாகவும் விமர்சித்தார். ஸ்டாலினின் கிண்டலைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பச்சை நிற பேருந்தை மாற்றி இருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பச்சை நிற வாகனத்தில் அல்லாமல் வெள்ளை நிற பிரச்சார வாகனத்திற்கு மாறி இருந்தார். பேருந்தை விடவும் பிரச்சார வாகனமே மக்கள் மத்தியில் உரையாற்ற எளிதாக இருப்பதால், எடப்பாடி பழனிசாமி மாற்றி இருப்பதாக அக்கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications