Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஹோ.. இதுதான் ப்ளானா.. பாஜகவை அதிமுக பிரிந்தது இதற்குத்தானா? ஆனா ஏமாற்ற முடியாதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டதாக அறிவித்த அதிமுக, திமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கால அதிமுகவைபோல் எடப்பாடி கால அதிமுகவை முஸ்லிம்கள் ஏற்பார்களா? விரிவாக பார்ப்போம்.

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக பாஜக உடனான கூட்டணியையே முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

Edappadi Palaniswamy target Muslim votes is the reason for BJP - ADMK breakup

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Edappadi Palaniswamy target Muslim votes is the reason for BJP - ADMK breakup

இந்த அறிக்கையில் அண்ணாமலையே பிரதான காரணமாக அதிமுக கூறி இருந்தாலும், வேறு சில காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. அதில் குறிப்பிட்டு கூறப்படுவது பாஜக வருகையால் அதிமுக இழந்து இருக்கும் சிறுபான்மை சமூக மக்களின் வாக்கு வங்கியாகும். அதன் ஒரு பகுதியாகவே பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதற்கு முன்பே கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அதேபோல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கோவை இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையை மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியது அதிமுக. அதேபோல், இஸ்லாமியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக குரல் கொடுத்தது. இப்படி இழந்த இஸ்லாமிய வாக்கு வங்கியை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, இது மட்டும் போதாது என்பதை உணர்ந்து கூட்டணியை முறித்துக்கொண்டார் என்றே பேசுகிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

அதிமுக தலைவர்களாக எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்த காலத்தில், திமுகவுக்கு இணையாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை அதிமுகவும் வைத்து இருந்தது. பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்த தேர்தலை தவிர்த்து மற்ற தேர்தல்களில் எல்லாம் இஸ்லாமியர் வாக்குகள் திமுகவுக்கு இணையாக அதிமுகவுக்கு விழுந்து உள்ளன. ஆனால், அவரது மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் ஆகியோரின் இரட்டைத் தலைமையின் கீழ் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் இஸ்லாமியர்களின் வாக்குகளை வெகுவாக இழந்தது.

அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அதிமுகவும் பாமகவும் மாநிலங்களவையில் ஆதரவளித்ததாலேயே அவை சட்டமாகின. இது அதிமுக மீதான இஸ்லாமியர்களின் கோபத்தை அதிகரித்தது. அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுக்களும் அப்போது கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாக 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை இஸ்லாமியர்கள் முற்றிலுமாக புறக்கணித்தன. திமுகவுக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்குகள் விழுந்தன.

இந்த 2 தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு தேர்தல் போன்றவற்றில் திமுக பெற்ற பெரும் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என கூறினார். இந்த நிலையில்தான் முஸ்லிம் வாக்குகளை கவரும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்திலேயே, "பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்று சந்தேகப்பட தேவையில்லை. 2024 தேர்தல் மட்டுமின்றி 2026 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது. சிறுபான்மை மக்களை சந்தித்து கட்சி நிலைபாடு தொடர்பாக சந்தித்து நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும்." என அவர் உறுதியாக சொன்னதை வைத்து இதை புரிந்துகொள்ளலாம்.

தற்போது மீண்டும் கண்ணை இமை காப்பது போல சிறுபான்மையினரை அதிமுக காக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதுமட்டுமின்றி சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக திமுக மீது தற்போது இஸ்லாமியர்கள் மத்தியில் சற்று அதிருப்தியான சூழல் நிலவும் நிலையில் அதை அறுவடை செய்யும் வகையில் அது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி, அதற்காக திருச்சியில் எஸ்டிபிஐ, ஐஎன்டிஜே உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரியையும் சந்தித்து பேசி உள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு தாவ வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் அதிமுக உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மறுபக்கம் பாஜகவோ தனது ஆஸ்தான தீவிர இந்துத்துவ வழியை தேர்ந்தெடுத்து இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் கோயில்களை மீட்கப்போவதாக பேசி வருகிறது. ஆனால், இதில் அதிமுகவும் பாஜகவும் ஒரு கணக்கு வைத்து இருப்பதாகவும் பேசப்படுகிறது.

கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகளும், பாஜகவுக்கு இந்துக்கள் மற்றும் திராவிட கட்சிகளின் எதிர்பாளர்களின் வாக்குகளும் விழும் எனவும், இதனால் இரு தரப்பில் இருந்தும் திமுகவின் கணிசமான அளவில் வாக்குகள் சரியும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை கொண்டு சில தொகுதிகளில் வெற்றிபெற்று தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி அமைக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி இதை திட்டவட்டமாக மறுத்தாலும் பலர் இவ்வாறு சொல்வதற்கு காரணம், கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், மாநில பாஜக தலைமையை மட்டுமே அதிமுக விமர்சித்துள்ளது. டெல்லி குறித்து பேசவே இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசவில்லை. கூட்டணியில் இருந்து விலகி 10 நாட்கள் கடந்த பிறகும் மத்திய பாஜக அரசை எந்த இடத்திலும் அதிமுக விமர்சித்ததாக தெரியவில்லை. இப்படி மத அடிப்படையில் வாக்கு வங்கியை கவர நினைத்தாலும், சமூக நீதி பூமியான தமிழ்நாட்டில் இது எடுபடாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+