இனி மிஸ்ஸாகாது.. ஆசிரியர்களுக்கு வரப்போகும் புதிய உத்தரவு... பள்ளி கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு மீண்டும் அமலுக்கு கொண்டுவர கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவி (பயோமெட்ரிக்) மூலம் வருகைப்பதிவு முறை ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்க, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு வருவோருக்கு உள்ளது போனற் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 2018, 2019வாக்கில் முடிவு செய்தது.

இதன்படியே தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவி (பயோமெட்ரிக்) மூலம் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணில் கடைசி 8 எண்கள் அடையாளமாக வழங்கப்பட்டது. அந்த எண் மற்றும் கைரேகையை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படியே ஆசிரியர்களும் பயமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்து வந்தனர். இந்த திட்டம் மூலம் வருகைப்பதிவு விவரங்கள் முதன்மை, மாவட்டக்கல்வி அதிகாரிகள் பார்வைக்கு நேரடியாக சென்றது. அதேநேரம் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது.
இடையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு இந்த முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற பள்ளி அலுவலர்கள், மொபைல் போன் செயலி வழியாக, தினசரி வருகையை பதிவு செய்ய தொடங்கினார்கள். அதேநேரம் சில ஆசிரியர்கள் பணிக்கே வராமல் வெளியே சுற்றினாலும், செயலியில் வருகை பதிவு செய்யப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குளறுபடியை தடுக்க, மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த, பள்ளிக்கல்வி துறை கடந்த 2023ம் ஆண்டே திட்டமிட்டிருந்தது. ஆனால் மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் பணிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் தேவைப்பட்ட காரணத்தால் அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்றை தற்காலிகமாக வாங்கியது. இதனால் பயேமெட்ரிக் முறை 2023ம் ஆண்டே அமல்படுத்த பள்ளி கல்வித்துறையால் முடியவில்லை..
இதன் காரணமாக ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வருகைப்பதிவை எமிஸ் வலைத்தளத்தின் செயலி வழியாகவே தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கருவூலக் கணக்குத்துறையின் அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் முதல் களஞ்சியம் செயலி வழியாக வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மீண்டும் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னேற்பாடாக பள்ளி மற்றும் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளதா? இல்லையெனில் தேவையுள்ள புதிய கருவிகள் எண்ணிக்கை, இதர வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அனைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications