எழும்பூர் ரயில் நிலையம் விரிவாக்கம்! வெட்டிய மரங்களுக்கு இறுதி காரியம்! பசுமை தாயகம் நூதன எதிர்ப்பு!
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பசுமை தாயகம் அமைப்பினர், நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பான விவரத்தை விரிவாக பார்க்கலாம்.
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஞாயிறு மதியம் சென்னை ஈ.வே.ரா சாலையில் நடத்தப்பட்டது.
தென்னக இரயில்வே நிறுவனத்தின் பசுமை அழிப்பு நடவடிக்கையை கண்டித்து, 'இனி வெட்டப்படவிருக்கும் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல், வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நட்டு வளர்த்தல், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் ஆகிய மாற்று வழிகளில் சாத்தியமானவற்றை தொடர்வண்டித்துறை செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியும், 'இதற்கான திட்டத்தை தொடர்வண்டித் துறை வெளியிட வேண்டும்; தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண்டும்' என்று கோரியும் இந்த நிகழ்ச்சி நடந்தது.
மேலும், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நேரு பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க பூங்கா, பனகல் பூங்கா, அடையாறு விளையாட்டுத் திடல் போன்ற பல பசுமைப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. மழைநீர் வடிகால் பணிகளுக்காக கே.கே. நகர் உள்ளிட்ட சென்னை நகரின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த அவல நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ்நாடு மாநில பசுமைக் குழு (State Green Committee), சென்னை மாவட்ட பசுமைக் குழு (District Green Committee) ஆகியவை முழுமையாக செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பசுமைக் குழுக்களால் (Green Committees) போதுமான பயன் கிடைக்கவில்லை என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, நகரங்களில் மரங்களைக் காக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் 'மரங்கள் ஆணையம்' (Tree Authority) என்கிற அதிகார அமைப்பை, போதுமான அதிகாரம், பணம், ஆட்கள் சக்தியுடன் ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டும் தேவை ஏற்பட்டால் அதனை ஆராய்ந்து இந்த ஆணையத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.
நகர்ப்புற மரங்களை காப்பதற்கான சிறப்பு சட்டத்தை (Urban Areas Preservation of Trees Act) உடனடியாக இயற்ற வேண்டும்.- ஆகிய கோரிக்கைகளை பசுமைத் தாயகம் அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications