செங்கல்பட்டு மீனவர் வலையில்.. எல்லாமே விஷ பாம்புகள்.. வங்ககடலில் விக்கித்து போக வைத்த சம்பவம்
சென்னை: கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது, வித்தியாசமான அனுபவங்களை அவ்வப்போது எதிர்கொள்வார்கள். வலையில் அவர்கள் எதிர்பார்த்த மீன் சில முறை கிடைக்காமல் போகலாம். சில இடங்களில் நினைத்த பார்க்க முடியாத அளவிற்கு அரிய வகை மீன்கள் கிடைக்கும். அதேபோல் எதிர்பாராதவிதமாக புயலும் வரலாம்.. அதேபோல் வலையில் எதிர்பார்க்காத அளவிற்கு நம்ப முடியாத உயிரினங்கள் மாட்டும். அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடலில் மீனுக்காக வீசப்பட்ட வலையில் 8 விஷ பாம்புகள் சிக்கி உள்ளன.
வங்ககடலில் விஷ பாம்புகள் எப்படி வருகிறது
வங்கக்கடலில் நீரோட்டம் வெப்பமானது.. இந்த காலநிலை கடல் பாம்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். எனவே வங்கக்கடலில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். இந்த விஷ கடல் பாம்புகள் ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும், பவளப்பாறைகள் நிறைந்த இடங்களிலும் வாழ்ந்து வருகின்றன. மீனவர்கள் பொதுவாக இத்தகைய பகுதிகளில்தான் மீன் பிடிப்பதை விரும்புவார்கள். ஏனெனில் அங்கு தான் மீன்கள் அதிகமாக கிடைக்கும். பாம்புகளும் மனிதனை போலவே அங்கு சிறிய வகை மீனை தேடிவரும் போது, அதை பிடிக்க விஷ பாம்புகள் கடலுக்குள் காத்திருக்கும். அப்போது மீன்களை போலவே விஷபாம்புகளும் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது.

எப்படி பாம்புகள் சிக்கும்
எப்படி பாம்புகள் சிக்கும் என்றால்... கடலில் உள்ள விஷ பாம்புகள் நீரிலேயே வாழ்ந்தாலும், அவை நுரையீரலால் சுவாசிப்பவையாகும். அவ்வப்போது காற்றுக்காக கடல் மட்டத்திற்கு மேலே வரும். அந்த சமயத்தில் இழுவலைகள் வீசப்பட்டிருந்தால், அவை எளிதில் வலையில் மாட்டிக்கொள்ளும்.நம்மூர் மீனவர்கள் இழுவலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனவே வலையில் பாம்புகள் எளிதாக சிக்கி கொள்ளும். அதேபோல் இனப்பெருக்க காலங்களில் தான் பாம்புகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும். அந்த சமயத்தில் அவை பெரிய அளவிலான விசைப்படகு வலைகளில் அதிக எண்ணிக்கையில் சிக்குவது நடக்கும்.
சதுரங்கப்பட்டினம் கடற்கரை
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் மனோஜ்குமார், நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். நடுக்கடலில் இறால் பிடிக்க வலை வீசினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு இறால்கள் சிக்கவில்லை. அதில் 8 கடல் விஷ பாம்புகள் மற்றும் இறால், நண்டு, சிறிய மீன்கள் என குறைந்த அளவிலேயே சிக்கி உள்ள. பிடிபட்ட மீன்களுடன் உயிருடன் நெளிந்து கொண்டிருந்த 8 கடல் விஷபாம்புகளை, ஒரு கட்டை மூலம் தூக்கி மீண்டும் கடலில் வீசிவிட்டு கரைக்கு திரும்பி உள்ளார்.
மீனவர்கள் தகவல்
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் கூறுகையில், "நமது ஊர்களில் வயல்பரப்பிலும், நிலங்களிலும் எப்படி விஷ பாம்புகள் வசிக்கின்றனவோ, அதேபோல் கடலிலும் ஒருவித கடல் விஷ பாம்புகள் மீன்களுடன் இருந்து வருகின்றன. சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கும்போது அவ்வப்போது சில கடல் விஷ பாம்புகள் மீன்பிடி வலையில் சிக்கிவிடும். கடல் விஷ பாம்புகள் கடித்தால் உடலில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டிவிடும். உடனடியாக தகுந்த மருத்துவ சிகிச்சை பெற்றால் உயிர் பிழைத்து கொள்ளலாம். சில நேரங்களில் நோய் எதிர்ப்பு குறைந்து உள்ளவர்களை கடிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சூழ்நிலை கூட ஏற்படும்" என்று மீனவர் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications