மைக்க கையில் எடுக்கட்டுமா.. ஐஜேகேவுக்கு போன சீமானின் சின்னம்! திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தேர்தல் ஆணையம்
சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐஜேகே) தேர்தல் ஆணையம் "மைக்" சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி போட்டியிடும் போது பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு 5க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே, வரவிருக்கும் தேர்தலில் பங்கேற்க தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தக் கட்சி ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கோரிக்கை, அந்தக் கட்சியின் சமூக வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெரம்பலூர், திருச்சி, அரியலூர் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை ஐஜேகே எதிர்பார்க்கிறது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்
இதற்கிடையில், கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு குறித்து மற்ற கட்சிகளும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) (தமாகா) தலைவர் ஜிகே வாசன் தங்களுக்கு குறைந்தபட்சம் 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் சூழல் தற்போது நான்கு முனைப் போட்டி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய ஜனநாயக கட்சி
ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தனித்தனி அரசியல் பாதையில் பயணித்து வருகின்றன. இந்த சூழலில், கூட்டணிகளின் வலிமை தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐஜேகே இணைந்திருப்பது, அந்த அணிக்கு கூடுதல் அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
குறிப்பாக பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமப்புற வாக்கு வங்கி அந்தக் கட்சிக்கு இருக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு பயனளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்திடம் ஐஜேகே மனு அளித்திருந்தது. அந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது "மைக்" சின்னத்தை அந்தக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
மைக் சின்னம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி பச்சமுத்து, "மக்களின் எண்ணங்களையும் உரிமைகளையும் ஒலிக்கும் குரலாக உண்மையை உரக்கச் சொல்லும் துணிச்சலின் அடையாளமாக விளங்கும் மைக் சின்னத்தை ஐஜேகேவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஐஜேகேக்கு கிடைத்துள்ள இந்த சின்னமும், தொகுதி கோரிக்கையும் எதிர்வரும் நாட்களில் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications