மஞ்சள் பத்திரிகையா நீ?.. கேமராவை புடுங்கு.. வைகோ சொன்னதுமே பத்திரிகையாளர் மன்றம் விட்ட டோஸ்
சென்னை: யார் நீ? எந்த பத்திரிகை? நீங்க மஞ்சள் பத்திரிகையா? திட்டமிட்டு வந்திருக்கீங்க, யார் உங்கள ஏவிவிட்டது? திட்டமிட்டு குழப்பம் செய்யவே வந்திருக்கியா? என்று பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் வைகோ மரியாதை குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது... பத்திரிகையாளரை கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்து உள்ளது
திருப்போரூர் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகக் கடுமையான வெறுப்பின் உச்சத்தில் இருந்ததாகவும், கமிஷன், கரெக்ஷன், கட்டிங் என அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து காணப்பட்டதாகவும் வைகோ விமர்சனங்களை முன்வைத்தார்.
நீங்க மஞ்சள் பத்திரிகையா?
உடனே செய்தியாளர் ஒருவர், "திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைக்கவில்லை, இப்போது மட்டும் ஏன் பேசுகிறீர்கள்?" என்று நேரடியாக கேட்டார்.
இந்த கேள்வியை வைகோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. உடனே செய்தியாளருக்கு எதிராக மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அளவுக்கு மீறி கோபப்பட்ட வைகோ அந்தப் பத்திரிகையாளரை நோக்கி, "யார் நீ? எந்த பத்திரிகை? நீங்க மஞ்சள் பத்திரிகையா? திட்டமிட்டு வந்திருக்கீங்க, யார் உங்கள ஏவிவிட்டது? திட்டமிட்டு குழப்பம் செய்யவே வந்திருக்கியா?" என்று மிரட்டும் தொனியில் மரியாதை குறைவாகப் பேசினார்.
வெளிய அனுப்பு, வெளியே அனுப்பு
அந்தப் பத்திரிகையாளரை சுட்டிக்காட்டி "வெளிய அனுப்பு, வெளியே அனுப்பு" என்று தொண்டர்களுக்கு கூறினார்.. உடனே அங்கிருந்த மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை நோக்கி கோபமாகப் பேசிக்கொண்டே அவரைத் தாக்குவது போல பாய்ந்தனர்..
பிறகு நிலைமை மோசமாவதை கண்ட அங்கு கூடியிருந்த சக பத்திரிகையாளர்களும் போலீசாரும், அந்தப் பத்திரிகையாளரை பத்திரமாக மீட்டனர்.. வைகோ செய்தியாளரை மிரட்டும் வகையில் பேசிய இந்த வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.
இந்நிலையில், வைகோவின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.. "அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற வைகோ பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல, ஏற்கனவே விருதுநகர் மாவட்டம்
வைகோவுக்கு கண்டனம்
சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அங்கு கூடியிருந்த மதிமுக தொண்டர்களிடம் பத்திரிகையாளர்களிடமிருந்து ஒளிப்பதிவுக் கருவிகளை பறிக்கும்படி மேடையில் இருந்தே வெளிப்படையாக உத்தரவிட்டார் என்று சுட்டிகாட்டி உள்ளது.
தற்போது, தமிழகத்தில் முன்பு எப்போதும் நடந்திராத, பல அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் வகையில், தொடர்புடைய அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. இதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால், பதில் சொல்லாமல் கடந்து செல்வது அவரவர் உரிமை.
நீ எந்த பத்திரிகை, யார் சொல்லி கேட்கிறாய்
ஆனால், கேள்வியே கேட்கக் கூடாது என்றும், "நீ எந்த பத்திரிகை, யார் சொல்லி கேள்வி கேட்கிறாய், இங்கிருந்து வெளியேறு" என்று பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பத்திரிகையாளர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்ளும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மூத்த அரசியல்வாதியான வைகோ அவர்கள், இதுபோன்ற நடவடிக்கையில் இனி ஈடுபடக் கூடாது என்ற வலியுறுத்திக் கேட்டு கொள்ளப்படுகிறது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications