எத்தியோபியா டூ சென்னைக்கு ரூ 15 கோடி கொக்கைன் கடத்தல்! கென்யா பெண் வயிற்றை எக்ஸ்ரே எடுத்த போது ஷாக்
சென்னை: எத்தியோப்பியா நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.15 கோடி மதிப்புடைய, 850 கிராம், கொக்கைன் போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருளை கேப்சூல்களாக மாற்றி, வயிற்றுக்குள் விழுங்கி, கடத்தி கொண்டு வந்த, கென்யா நாட்டு இளம் பெண்ணை, டி.ஆர்.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த, கென்யா நாட்டு இளம் பெண்ணிடம், டி.ஆர்.ஐ மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
எத்தியோப்பியா நாட்டிலிருந்து, சென்னைக்கு வரும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பெரிய அளவில் கொக்கைன் போதை பொருளை, சென்னைக்கு கடத்திக் கொண்டு வருவதாகவும், அந்த இளம் பெண் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த தனிப்படை அதிகாரிகள், நேற்று திங்கள்கிழமை காலை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை, டிஆர்ஐ அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது இளம்பெண் ஒருவர், கென்யாவில் இருந்து, எத்தியோப்பியா வழியாக, சுற்றுலா பயணி விசாவில், இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.
டிஆர்ஐ அதிகாரிகளுக்கு, அந்த கென்யா நாட்டு இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதனால் டிஆர்ஐ அதிகாரிகள், அந்த இளம் பெண்ணை, வெளியில் அனுப்பாமல், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இளம் பெண், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், அதிகாரிகளின் எந்த கேள்விகளுக்கும், பதில் அளிக்காமல் மவுனம் சாதித்தார்.
இதை அடுத்து டி ஆர் ஐ அதிகாரிகள், அந்தப் பெண்ணின் உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். ஆனால் உடைமைகளில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.
இதையடுத்து, இளம் பெண்ணை, விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவருடைய வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அவர் வயிற்றுக்குள் பெருமளவு கேப்சூல்கள் விழுங்கி வந்திருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து மருத்துவ குழுவினர் உதவியுடன், கென்யா நாட்டு இளம் பெண் வயிற்றுக்குள் விழுங்கி வந்த கேப்சூல்களை, வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவ்வாறு அந்தப் பெண் விழுங்கி வந்திருந்த, சுமார் 70 கேப்சூல்கள், வெளியில் எடுக்கப்பட்டன. அந்த கேப்சூல்களை உடைத்துப் பார்த்தபோது, மிகவும் உயர்தரமான, கொக்கைன் போதைப் பொருள் கேப்சூல்களில், மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சுமார் 850 கிராம் கொக்கைன் கேப்சூல்களை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து டிஆர்ஐ அதிகாரிகள் கென்யா நாட்டு இளம் பெண்ணை கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கென்யா நாட்டு இளம் பெண், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. எனவே இவர் சென்னையில் இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்? சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், சென்னையில் எங்கு இருக்கிறார்கள்? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புடைய, கொக்கைன் போதைப் பொருளை, கேப்சூல்கள் வடிவில், வயிறுக்குள் விழுங்கி கடத்தி வந்த, கென்யா நாட்டு இளம்பெண், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications