விரைவில் சட்டசபை தேர்தல்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் ஊழலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நடத்தி முடித்துள்ளது. தற்போது, தேர்தலை நடத்துதல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதிஇன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
டெல்லியில் 11 ஆம் தேதி சமூக ஊடக நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. பின்னர் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு மார்ச் 15 அல்லது 16ல் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 5 மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் ஊழலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 40 லட்சம் வரை செலவு செய்யலாம். அதுதான் தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் உச்ச வரம்பு. அதற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாகச் செலவழித்தாலும் அதனை ஊழல் என்கிறது தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications