Election Exclusive: தவெக - காங்., கூட்டணி உறுதி? கட்சி இரண்டாக உடைவது உறுதி? டெல்லி மீட்டிங்கால் கடுகடுப்பில் அறிவாலயம்!
சென்னை: தமிழக அரசியலில் திராவிட முன்னேற்ற கழகம் - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, புதிய அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அணியுடன் காங்கிரஸ் இணையும் வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதெ நேரத்தில் நீண்ட காலமாக கூட்டணியை உடைத்தால், காங்கிரஸும் உடையும் என்கின்றனர் சில மூத்த தலைவர்கள். இதனால் ராகுல்காந்திக்கே நெருக்கடி ஏற்படும் என்கின்றனர்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதன் பின்னர், காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் அதிக இடம், ஆட்சியில் பங்கு போன்ற விஷயங்களில் தொடர்ந்து விவாதம் நடந்துவரும் நிலையில், மாற்று அரசியல் வாய்ப்புகளை ஆய்வு செய்யும் முயற்சிகள் காங்கிரஸ் தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், புதிய கூட்டணி வாய்ப்பு பற்றி காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்புகள் குறித்து கட்சிக்குள் சில முக்கிய தலைவர்கள் தலைமையிடம் வலியுறுத்திப் பேசியுள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி மாற்றம்
இதனையடுத்து, கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு மற்றும் முக்கிய நிர்வாகிகள் தயாரித்த அறிக்கைகள் டெல்லியில் தேசியத் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனியாக அல்லது புதிய கூட்டணியுடன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்கு சாதகமானதாக கருதப்படும் தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும், அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
டெல்லி ஆலோசனை
இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி முன்னிலையில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த சந்திப்பில் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்கால கூட்டணி அமைப்பு, தொகுதி தேர்வு மற்றும் தேர்தல் திட்டம் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி திட்டம்
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் சென்னை வந்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பு, திமுகவுடன் நீண்டகாலமாக இருந்து வரும் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
உடையும் காங்கிரஸ்
மற்றொரு தரப்பு, புதிய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி மாற்று கூட்டணி மூலம் அரசியல் நிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இந்த கருத்து வேறுபாடு கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மோதலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலிடம் மாற்று கூட்டணியைத் தேர்வு செய்தால், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சில முக்கிய தலைவர்கள் தனியாக பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அந்த மாற்றம் மற்ற கட்சிகளின் அரசியல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கணிப்பும் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிகள் குறித்த இறுதி முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸை உன்னிப்பாக கவனித்து வருகிறது திமுக தலைமை.












Click it and Unblock the Notifications