Election Exclusive: வாசனுக்கு எவ்வளவு நல்ல மனசு.. எடப்பாடி வயிற்றில் பாலை வார்த்த தமாகா! ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கே!
சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா எடுத்துள்ள புதிய முடிவு எடப்பாடிபழனிசாமிக்கு சற்றே ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த நடக்கவுள்ள மாநிலங்களவை எம்பி தேர்தலில் தனது கட்சி எம்பி பதவி வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் தமாகா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காலாவதியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநில சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்த இடங்களில் எத்தனை இடங்கள் எந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் படி, ஆளும் திமுக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கும் தனித்தனியாக இடங்கள் கிடைக்கவுள்ளன. அதன்படி திமுகவுக்கு 4 எம்பிகளும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

அதிமுக கூட்டணி
இந்த சூழலில் கடந்த முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஜி.கே. வாசன், இம்முறை அந்த வாய்ப்பை ஏற்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்து இருப்பது முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது. தமாகா தரப்பின் விளக்கப்படி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலே கட்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை சட்டப்பேரவையில் அதிக பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பது கட்சியின் நோக்கமாக கூறப்படுகிறது.
ஜி கே வாசன்
அதன்படி, 12 தொகுதிகள் வரை கோரி பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தது 8 தொகுதிகள் கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை கட்சி முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவிடம் இரண்டு மாநிலங்களவை எம்பி பதவியை பெரும் வகையில் மட்டுமே எம்பிக்கள் பலம் இருக்கும் நிலையில் ஒரு எம்பி பதவியை பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸுக்கு தர எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டுள்ளார்.
மாநிலங்களவை தேர்தல்
இன்னொரு சீட்டை அதிமுக நிர்வாகிகளுக்கு தரவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம், அதே நேரத்தில் கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியதால் இந்த முறை ஜி கே வாசன் கேட்பார் என்பதால் சிக்கல் எழ வாய்ப்பு இருந்தது. அதே நேரத்தில் பாஜக டிடிவி தினகரனுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை தர வலியுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி சிக்கலில் இருந்த நிலையில் ஜி கே வாசனின் இந்த முடிவு எடப்பாடிக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
அதே நேரத்தில் தாமாகவுக்கு எட்டு தொகுதிகளை ஒதுக்க முன்வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின் போது போது திருச்சி சிவா, கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜிகே வாசன் உள்ளிட்ட ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை எம்பி தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு ஒரு சீட்டை தர திமுக முன் வந்திருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளும் எம்பி சீட்டை எதிர்பார்க்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே மாநிலங்களவை தேர்தல் வந்திருப்பது அதிமுக திமுக கட்சிகளுக்கு ஒரு தலைவலி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications