மையம் கொண்டது ’சின்னம்மா’ புயல்.. 24ல் பரமக்குடியில் கரையை கடக்குமா? தயார் நிலையில் எடப்பாடி டீம்.!
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ஆம் தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா 'அம்மா அதிமுக' என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி சேர்ப்பது தான் சசிகலாவின் திட்டம் என்கின்றனர். மேலும், முக்குலத்தோர் வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் சசிகலா இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் அவருடன் மேலும் சிலர் கூட்டு சேரலாம் என்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இதுவரை இருந்த கூட்டணிகள் கூட கடைசி நேரத்தில் மாறலாம் என சொல்லப்படுகிறது. மேலும் புதிய அணிகள் உருவாவதற்கான சூழல்களும் உருவாகி இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் பலப்பரீட்சை மட்டுமல்ல, விஷ பரீட்சை என்று கூட சொல்லலாம். காரணம், தமிழ்நாடு முதலமைச்சராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
இதனால் '10 தோல்வி பழனிச்சாமி' என்ற விமர்சனமும் எடப்பாடி பழனிச்சாமி மீது முன்வைக்கப்பட்டது. 2021 தேர்தலில் ஓபிஎஸ் உடன் இருந்தார் என எடப்பாடி சொன்னாலும் அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டதால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம்.
டிடிவி தினகரன்
அதற்காக இனிமேல் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என சொன்னா பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த அன்பு மணியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார். எல்லாவற்றையும் விட எடப்பாடி பழனிச்சாமியை பச்சை துரோகி என விமர்சித்த டிடிவி தினகரன் உடனும் எடப்பாடி கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் அதிகரித்தே வருகிறது. அதற்கு காரணம் சசிகலா.
ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராகவும் பதவியேற்க இருந்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அது தள்ளிப்போனது. தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்கள் முதலமைச்சராக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திடீரென எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதற்குப் பிறகு கால சூழல்கள் மாறியது. தன்னை முதலமைச்சராகிய சசிகலாவை உதறிவிட்டு சட்டமன்றத்தில் தனக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்தார் எடப்பாடி.
சசிகலா
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பெரும் புரட்சியை ஏற்படுத்துவார் எனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. பிரிந்து சென்ற அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என மட்டுமே பேசி வந்த சசிகலா தேர்தல்களிலும் மக்களவைத் தேர்தலிலும் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தனது உறவினரான டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டு சேர்ந்ததால் கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. மேலும், நெருக்கடி உள்ளாக்கிய பாஜகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ள சசிகலா அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார்.
அம்மா அதிமுக
அதுதான் தனிக்கட்சியை தொடங்குவது. அம்மா அதிமுக என்ற பெயரில் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சி பெயர் அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து மதுரையில் பிரம்மாண்ட மாநாடு மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்பதாக சொல்லப்படுகிறது. இல்லையேல் தனது தம்பி திவாகரனின் கட்சியில் சேர்ந்து கொள்வதும் சசிகலாவின் திட்டமாக இருக்கிறது.
முக்குலத்தோர் வாக்குகள்
ஆனால் அதன் பின்னணியில் தான் அவரது அரசியல் திட்டமே இருக்கிறது. சசிகலாவின் பிரதான வாக்கு வங்கியாக கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகள், தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகள், தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக வலுவாக இருக்கிறது. தான் தேர்தலில் போட்டிராவிட்டால் முக்குலத்தோர் வாக்குகள் திமுகவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதும் சசிகலா அதனை தடுக்கவே புது கட்சி ஐடியாவை எடுத்திருப்பதாக சொல்கின்றனர்.
விஜய் உடன் கூட்டணி
அதே நேரத்தில் அதிமுகவுக்கும் அந்த வாக்குகள் சென்று விடக்கூடாது என திட்டமிட்டு இருக்கும் அவர், 2026 தேர்தலில் புதிய அணியில் இணையும் முடிவெடுத்து இருப்பதாக சொல்கின்றனர். அதாவது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர விஜய் திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம் எனவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications